கருங்காலக்குடியில் பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்ட கோரி முற்றுகை போராட்டம்

மேலூர் : மேலூர் அருகே கருங்காலக்குடியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 150க்கும் மேற்பட்ட மாண, மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளிக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட இவ்விடத்தில், சுற்றுச்சுவர் கட்ட கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு முடிவெடுக்கப்பட்டது. ஆனால், இப்பள்ளியின் பின்புறம் உள்ள குடியிருப்பிற்கு பள்ளி வளாகம் வழியாக பாதை கொடுக்க வேண்டும் என சிலர் நிர்பந்தம் செய்ததால், அப்போது சுற்றுச்சுவர் எடுப்பது நிறுத்தப்பட்டது.

இதை தொடர்ந்து பள்ளி நிர்வாகம் சார்பில் கோர்ட்டிற்கு செல்ல, அவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வர, ரூ.24 லட்சம் சுற்றுச்சுவருக்காக ஒதுக்கப்பட்டது. ஆனால் ஊராட்சி நிர்வாகம் இதற்கு முட்டுக்கட்டை போட, மீண்டும் வழக்கு கோர்ட் படியேறியது. தொடர்ந்து பள்ளிக்கு சாதகமாக தீர்ப்புகள் வரவே, ஒரு சில நபர்களின் தூண்டுதலால், சுற்றுச்சுவர் கட்டுவது நின்று போயிருந்தது. இதனால், கால்நடைகள் பள்ளி வளாகத்திற்குள் நுழைந்து மாணவர்களை அச்சுறுத்தி வந்தது. இத்துடன் இரவு நேரத்தில் சுற்றுச்சுவர் இல்லாத இப்பள்ளி, சமூகவிரோத கூடமாக மாறியது. இதனால் பள்ளிக்கு உடனே சுற்றுச்சுவர் கட்ட கோரி நேற்று பெற்றோர்கள், பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து அவர்களுடன் சேர்ந்து பள்ளி முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த ஆர்டிஓ பிர்தவுஸ் பாத்திமா, ஊராட்சிகள் உதவி இயக்குநர் அரவிந்த், யூனியன் ஆணையாளர் செல்லப்பாண்டியன், பிடிஓ ராமமூர்த்தி, வட்டார கல்வி அலுவலர் ஆரோக்கிய தாஸ் மற்றும் கொட்டாம்பட்டி போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். விரைவில் சுற்றுச்சுவர் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஆர்டிஓ உறுதி அளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. தொடர்ந்து மாணவர்கள் 12.30 மணிக்கு வகுப்பறைகளுக்கு சென்றனர்.

Related Stories: