கிணத்துக்கடவு, மதுக்கரை பகுதியில் அபாய வளைவு எச்சரிக்கை பலகையை மறைக்கும் புதர்களால் விபத்து அபாயம்

நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மதுக்கரை : கிணத்துக்கடவு, மதுக்கரை பகுதியில் சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள அபாய வளைவு எச்சரிக்கை பலகையை மறைக்கும் வகையில் அடர்ந்து வளர்ந்த புதர்களால் விபத்து ஏற்படும் அபாயம் நிலவுகிறது. இந்த புதர்களை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் விரைந்து அகற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

கோவை மாவட்டத்தில் கேரள மாநில எல்லையை ஒட்டியுள்ள கிணத்துக்கடவு மற்றும் மதுக்கரை பகுதியில் கடந்த 2 வாரத்திற்கு முன்பு வரை தொடர் மழை பெய்து வந்தது. தொடர் மழையால் கிராமப்பகுதியில் உள்ள பெரும்பாலான சாலைகள் பழுதடைந்தது. அதுமட்டுமின்றி சாலையின் இருபுறமும் செடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. கிணத்துக்கடவை அடுத்த சொக்கனூரில் இருந்து சட்டக்கல்புதூர் செல்லும்  சாலையில் வைத்திருந்த அபாய வளைவு எச்சரிக்கை பலகையை, அடர்ந்து வளர்ந்துள்ள  புதர்கள் மறைத்துள்ளது. இதனால் விபத்து ஏற்படும் சூழல் நிலவுகிறது.

இதனால் கிராம மக்கள், வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் கிராமப்புற சாலைகளில் ஊர்ப்பெயர் பலகைகளும் கிலோ மீட்டர் அளவு காட்டும் நடு கற்களும் புதர்களால் மறைந்து போயுள்ளது. மேலும் விபத்துகளை தடுக்கும் வகையில் வைத்துள்ள விபத்து பகுதி, அபாய வளைவு என்னும் போர்டுகளும் புதருக்குள் சிக்கி வெளியில் தெரியாமல் இருக்கிறது. இதனால் கிராமப்புற சாலைகளில் விபத்துகள் ஏற்படும் சூழ்நிலை நிலவுகிறது. இதை தடுக்கும் வகையில் ஊராட்சி ஒன்றிய பொறியாளர்களும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும் கிராம சாலைகளில் வளர்ந்துள்ள அடர்ந்த புதர்களை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: