திருச்சுழியில் சாலையோரம் குவிக்கப்படும் குப்பையால் சுகாதாரக்கேடு-ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

திருச்சுழி : திருச்சுழியில் சாலையோரம் குவிக்கப்படும் குப்பையால் பொதுமக்களுக்கு சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. இது குறித்து ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.திருச்சுழியிலிருந்து காரியாபட்டிக்கு செல்லும் சாலையில் தனியார் மேல்நிலைப்பள்ளி உள்ளது.இதன் அருகே ரயில்வே மேம்பாலம் அமைந்துள்ளது. இந்நிலையில், திருச்சுழியில் உள்ள ஓட்டல்களில் சேகரமாகும் கழிவுகள், வீடுகளிலில் சேகரமாகும் குப்பைகள், கோழி இறைச்சிக் கழிவுகளை சாலையோரம் கொட்டுகின்றனர். மேலும், அதில் தீ வைக்கின்றனர்.

இதனால், துர்நாற்றம் வீசி பொதுமக்களுக்கு சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. காரியாபட்டியிலிருந்து திருச்சுழி வழியாக தினசரி ராமேஸ்வரம், கமுதி, சாயல்குடி ஆகிய ஊர்களுக்கு செல்லும் வாகனங்கள் இந்த சாலை வழியாக சென்று வருகின்றன.

தற்போது வைரஸ் காய்ச்சல் பரவி வரும் சூழ்நிலையில் திருச்சுழி பகுதியில் பன்றிகள் சுதந்திரமாக வீதி உலா வருகின்றன.மேலும், இந்த சாலை அருகே தனியார் மேல்நிலைப்பள்ளி உள்ளது. குப்பைகளால் துர்நாற்றம் வீசி மாணவர்களுக்கு சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.மேலும் குப்பைகளில் தீ வைப்பதால், மாணவ, மாணவியருக்கு மூச்சுத் திணறல் ஏற்படுகிறது.

எனவே, பள்ளி அருகே சாலையில் குப்பைகள் கொட்டாமல் இருக்க, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து தனியார் பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில், ‘இப்பள்ளியில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். பள்ளி அருகே செல்லும் சாலையில், ஓட்டல்களில் சேகரமாகும் கழிவுகள் மற்றும் கோழிக்கழிவுகளை கொட்டுவதால் துர்நாற்றம் வீசுகிறது. மாணவர்கள் வகுப்பறையில் அமர்ந்து பாடத்தை கவனிக்க முடியவில்லை. பொதுமக்களுக்கும் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.குப்பையில் தீ வைப்பதால், மாணவ, மாணவியருக்கு மூச்சுத் திணறல் ஏற்படும் சூழல் உருவாகிறது.எனவே, பொதுமக்கள், மாணவ, மாணவியர் நலன் கருதி, குப்பைகள் கொட்டுவதை தடுக்க, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Related Stories: