அன்னூர் அருகே தென்னந்தோப்பில் திருட்டை தடுக்க வைத்த மின்வேலியில் சிக்கி வாலிபர் பலி-சடலத்தை மறைக்க முயற்சித்த 6 பேர் கைது

அன்னூர் : அன்னூர் அருகே தென்னந்தோப்பில் திருட்டை தடுக்க வைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி இளைஞர் பலியான சம்பவத்தில் சடலத்தை மறைக்க முயற்சித்ததாக 6 பேரை கைது செய்து போலீசார் விசாரிக்கின்றனர். கோவை மாவட்டம், அன்னூர் அருகே கஞ்சப்பள்ளியை சேர்ந்த சிவக்குமார் மகன் சுஜித் (22). பெயிண்டர். இவர் கடந்த 21ம் தேதி கஞ்சப்பள்ளியில், சாலையோர பள்ளத்தில் மின்சாரம் தாக்கி கருகிய நிலையில் இறந்து கிடந்தார். ஆனால் அருகில் மின்கம்பமோ, மின் கம்பிகளோ ஏதும் இல்லை.

இது குறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிந்து செய்து விசாரணை நடத்தி வந்தனர். இது குறித்து போலீசார் தொடர் விசாரணை செய்ததில் மேலும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. கஞ்சப்பள்ளி- பனைமரத்தோட்டம் துரைசாமி (59) என்பவர் கடந்த சில மாதங்களாக தென்னை மரத்தில் கள் இறக்கி விற்று வந்துள்ளார். தென்னை மரத்தில் கள் திருட்டு போனதால் அதை தடுக்க 110 தென்னை மரங்களுக்கும் இரும்பு கம்பியால் தென்னை மரங்களை சுற்றி வேலி அமைத்து, அதில் இரவு நேரங்களில் மின் இணைப்பு கொடுத்துள்ளார். கடந்த 21ம் தேதி அங்கு திருட்டுத்தனமாக கள் குடிக்க வந்த சுஜித் மின்வெளியில் சிக்கி, மின்சாரம் பாய்ந்து இறந்துள்ளார்.

இதையடுத்து துரைசாமி (60), அங்கு கள் குடிக்க வந்த  தாசபாளையம் வெங்கிட்டான் (50), ஊத்துப்பாளையம் நீலுகஞ்சன் என்கிற ரங்கசாமி (45), ருத்ரியாம்பாளையம் குணசேகரன் (49), கஞ்சப்பள்ளி பழனிச்சாமி (57),  மின்வாரிய முன்னாள் ஊழியரான முத்துகுமார் (50) ஆகியோருடன் சேர்ந்து இறந்த சுஜித்தின் உடலை வேறு இடத்துக்கு அப்புறப்படுத்தியுள்ளனர் என தெரியவந்துள்ளது. மேலும் உயிரிழந்த சுஜித் காளப்பட்டியை சேர்ந்தவர் எனவும், பெயிண்டர் என்பதும்,  அவரது மனைவி மகேஷ் கஞ்சப்பள்ளி அருகே உள்ள ருத்ரியாம்பாளையம் பகுதியில்  இருப்பதால் அதே பகுதியில் சுற்றி திரிந்து வந்தபோது இரவு நேரத்தில் கள்  குடிக்க சென்றதால் மின்வேலியில் சிக்கி உயிரிழந்ததும் போலீசார் விசாரணையில்  தெரிய வந்தது.

இதையடுத்து அன்னூர் போலீசார் உயிரிழப்பு ஏற்படுத்தியது, திருட்டுத்தனமாக கள் விற்பனை செய்தது, இறந்தவரின் உடலை மறைத்தது ஆகிய குற்றங்களுக்காக வழக்குப்பதிந்து 6 பேரையும் கைது செய்து, மின் வேலி அமைக்க பயன்படுத்திய இரும்பு கம்பிகளையும் கைப்பற்றினர். இதைத்தொடர்ந்து, நேற்றிரவு மேட்டுப்பாளையம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related Stories: