வாட்டர்ஜென் டென்னிஸ்: முதல் சுற்றில் டொமினிக் தீம் வெற்றி

டெல் அவிவ்: டெல் அவிவில் நடந்து வரும் வாட்டர்ஜென் டென்னிஸ் முதல் சுற்றுப் போட்டியில் ஆஸ்திரியாவின் டென்னிஸ் நட்சத்திரம் டொமினிக் தீம், செர்பியாவின் லாஸ்லோ டெரியை வீழ்த்தினார். கடந்த 2020ம் ஆண்டு யுஎஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாமில் ஒற்றையர் பட்டத்தை கைப்பற்றி, டென்னிஸ் உலகை மிரளச் செய்த ஆஸ்திரிய வீரர் டொமினிக் தீம், அதன் பின்னர் குறிப்பிடத்தக்க வகையில் டென்னிஸ் போட்டிகளில் முத்திரை பதிக்கவில்லை. யுஎஸ் ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் ஏடிபி தரவரிசையில் கடந்த 2020ம் ஆண்டு 3ம் இடத்தை பிடித்த டொமினிக் தீம், தற்போது 182வது இடத்தில் உள்ளார்.

கடந்த 6 மாதங்களாக தீவிர பயிற்சி மேற்கொண்டு வரும் டொமினிக் தீம் தற்போது டெல் அவிவில் நடைபெற்று வரும் வாட்டர்ஜென் ஓபனில் பங்கேற்றுள்ளார். நேற்று நடந்த முதல் சுற்றுப் போட்டியில் செர்பிய வீரர் லாஸ்லோ டெரியுடன் மோதினார். இருவரும் இதற்கு முன்னர் ஒரே ஒரு போட்டியில் ஆடியுள்ளனர். அதில் லாஸ்லோ வெற்றி பெற்றிருந்தார். நேற்றைய போட்டியிலும் முதல் செட்டில் லாஸ்லோவின் கையே ஓங்கியிருந்தது. 7-5 என அந்த செட்டை லாஸ்லோ கைப்பற்றினார். 2வது செட்டில் இருவருமே அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக டொமினிக் தீமின் சர்வீஸ்கள் துல்லியமாக இருந்தன.

இதனால் அந்த செட் டைபிரேக்கர் வரை நீடித்தது. தனது சர்வீஸ்கள் மூலம் டைபிரேக்கரில் இரண்டாவது செட்டை 7-6 என டொமினிக் தீம் கைப்பற்றினார். 3வது செட்டில் முழுக்க முழுக்க டொமினிக் தீம் ஆதிக்கம் செலுத்தினார். சரியான நேரத்தில் லாஸ்லோவின் கேமை பிரேக் செய்த அவர், அந்த செட்டை 6-4 என எளிதாக கைப்பற்றி, நடப்பு வாட்டர்ஜென் டென்னிஸ் முதல் சுற்றில் தனது வெற்றியை பதிவு செய்தார். இருவருக்கும் இடையேயான இப்போட்டி 2 மணி நேரம் 40 நிமிடம் நடந்தது. போட்டி முடிந்த பின்னர் டொமினிக் தீம் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘டெல் அவிவில் விளையாடுவது எனக்கு எப்போதுமே பிடித்தமான ஒன்று.

இப்போட்டியின் துவக்கம் எனக்கு சரியாக அமையவில்லை. ஆனால் இறுதியில் வெற்றி பெற்றது மகிழ்ச்சியாக உள்ளது. என் மேல் நம்பிக்கை வைத்து ரசிகர்கள் அதிகமானோர் இப்போட்டியை காண வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு எனது நன்றி. அவர்களது நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும் என்பதே எனது முதல் எண்ணம்’’ என்று தெரிவித்தார். நாளை நடைபெற உள்ள 2வது சுற்றுப் போட்டியில் குரோசியாவின் மரின் சிலிக்கை எதிர்த்து, டொமினிக் தீம் மோதவுள்ளார். ஏடிபி தரவரிசையில் தற்போது 16வது இடத்தில் உள்ள மரின் சிலிக், கடந்த 2014ம் ஆண்டு யுஎஸ் ஓபனில் ஆடவர் ஒற்றையர் பட்டத்தை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: