மாணவன் புகை பிடித்து மாணவி மீது ஊதிய விவகாரம் ஆசிரியர்கள், சஸ்பெண்ட் கண்டித்து மாணவர்கள் சாலை மறியல்

* முதன்மை கல்வி அலுவலர், எஸ்பி பேச்சுவார்த்தை

* 6 மணி நேரத்திற்கு பின்னர் சமரசத்தால் பரபரப்பு

ஆரணி : மாணவன் புகை பிடித்து மாணவி மீது ஊதிய விவகாரத்தில் ஆசிரியர்கள் சஸ்பெண்ட்  செய்யப்பட்டதை கண்டித்து மாணவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் முதன்மை கல்வி அலுவலர், எஸ்பி பேச்சுவார்த்தை நடத்தினர்.திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த சேவூர் ஊராட்சியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 783 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். மேலும், பள்ளியில் தலைமை ஆசிரியர் மீனாட்சி உட்பட 16 ஆசிரியர், ஆசிரியைகள் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு பள்ளி முடித்துவிட்டு வீட்டிற்கு செல்லும்போது, பிளஸ் 1 மாணவர் ஒருவர் தனது, நண்பர்களுடன் சிகரெட் பிடித்து, மாணவிகள் முகத்தில் புகை விட்டு கேலி, கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது.

இதில், பாதிக்கப்பட்ட மாணவி ஆசிரியர்களிடம் நடந்ததை தெரிவித்துள்ளார். இதனால், தலைமை ஆசிரியருக்கு தெரியாமல் பள்ளி ஆசிரியர்கள் வெங்கட்ராமன், திலீப்குமார், நித்யானந்தம், பாண்டியன் ஆகியோர் சம்பந்தப்பட்ட மாணவரை அழைத்து சென்று, இதுபோன்ற பழக்கங்களில் ஈடுபட்டால், பள்ளி வகுப்பறைகளில் சேர்க்க மாட்டோம், பெற்றோர்களிடம் தெரிவித்து டிசி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கடுமையாக எச்சரித்து அடித்ததாக கூறப்படுகிறது.  பாதிக்கப்பட்ட மாணவன் வீட்டிற்கு சென்று பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

 இதுகுறித்து மாணவனின் பெற்றோர் ஆரணி தாலுகா போலீசில் புகார் அளித்தனர்.  அதன்பேரில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷ்குமார், மாவட்ட கல்வி அவலுவலர் சந்தோஷ் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர். ஆசிரியர்கள் வெங்கட்ராமன், திலீப்குமார் ஆகியோரை சஸ்பெண்ட் செய்தும், முதுகலை ஆசிரியர்கள் நித்தியானந்தம் கேளூர் அரசு மேல்நிலைப் பள்ளிக்கும், ஆசிரியர் பாண்டியன் முள்ளண்டிரம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கும் பணியிட மாற்றம் செய்து சிஇஓ உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், சேவூர் அரசு மேல்நிலைப் பள்ளியில்  நேற்று காலை 9 மணி அளவில் பள்ளிக்கு வந்த 200 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள்  சஸ்பெண்ட் மற்றும் பணியிட மாற்றம் செய்யப்பட்ட 4 ஆசிரியர்கள் மீது எந்த தவறும் இல்லை. அதனால்,  அவர்களை மீண்டும்  பள்ளியில் பணியாற்ற அனுமதிக்க வேண்டும் எனக் கூறி திடீரென பள்ளி முன்பு அமர்ந்து  முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து வந்த மாவட்ட கல்வி அலுவலர் சந்தோஷ்குமார், பள்ளி துணை ஆய்வாளர் பாபு, டிஎஸ்பி ரவிச்சந்திரன், இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜன், ஊராட்சிமன்ற தலைவர் ஷர்மிளாதரணி ஆகியோர் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.  இதையேற்க மறுத்து மாணவர்கள், ஆசிரியர்கள் எந்த தவறும் செய்யவில்லை. ஒரு மாணவன் சிகரெட் பிடித்து மாணவியின் முகத்தில் விட்டு கேலி கிண்டல் செய்தார்.

பள்ளி வகுப்பறையில் புகையிலை, கஞ்சா உள்ளிட்ட பழக்கத்தில் ஈடுபட்டதால் தான் ஆசிரியர்கள் அவரை அழைத்து கண்டித்து எச்சரித்தனர். ஆனால், மாணவன் மாட்டிக் கொள்ளாமல் இருக்க பெற்றோர்களிடம் தவறாக  ஆசிரியர்கள் மீது பழி கூறியுள்ளார். எந்த தவறும் செய்யாத ஆசிரியர்கள் சஸ்பெண்ட், பணியிட மாற்றம் செய்யப்பட்டதை திரும்ப பெற்று, அவர்களை  திரும்ப பள்ளியில் பணியாற்ற அனுமதிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என கோஷமிட்டு பள்ளியை முற்றுகையிட்டனர்.

தொடர்ந்து, சேவூர் பஸ்நிறுத்தம் ஆரணி- வேலூர் செல்லும் சாலையில்  முன்னாள் பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் என ஆசிரியர்களுக்கு ஆதரவாக மாணவர்களுடன் 300 க்கும் மேற்பட்ட நபர்கள் மறியலில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு வந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷ்குமார் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

இதனை ஏற்க மறுத்த மாணவர்கள் உடனடியாக 4 ஆசிரியர்களை இதே பள்ளியில் பணியாற்ற நடவடிக்கை எடுத்தால் தான் மறியலை கைவிட்டு கலைந்து செல்வோம் என தெரிவித்து மறியலில் ஈடுபட்டனர். பின்னர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் காவல்துறையினர் மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

மேலும், அங்கு வந்த எஸ்பி கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் தேவையில்லாமல் பள்ளி அருகில் இருந்த நபர்களை விரட்டினர். இதன்பின், எஸ்பி மாணவர்களிடமும், பெற்றோர்களிடம் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். உங்கள் கோரிக்கைகளை கடிதமாக எழுதி கொடுங்கள், கலெக்டரிடம் தகவல் தெரிவித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தார்.

இதையடுத்து, மாணவர்கள் சுமார் 6 மணி நேரத்திற்கு பிறகு மறியலை கைவிட்டு பள்ளிக்கு கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. முன்னதாக மாணவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால், வேலூர்- ஆரணி சாலையில் வாகனங்கள் நீண்ட வரிசையில் நீன்று போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் போலீசார் மாற்று வழியில் வாகனங்களை திருப்பி விட்டனர்.

Related Stories: