கம்பம் நகராட்சியில் 10 ஆண்டுகளாக முடக்கப்பட்டவை 5 மாதத்தில் ரூ.12 கோடி மதிப்பில் புதிய திட்டங்கள்

*கூடுதலாக ரூ.10 கோடி மதிப்பில் புதிய திட்டங்கள்

*கம்பம் நகராட்சிக்கு குவியும் பாராட்டு

கம்பம் : கம்பம் நகராட்சியில் கடந்த பத்து ஆண்டுகளாக முடக்கப்பட்ட மக்கள் நலப்பணிகள் 5 மாதத்தில் ரூ.12 கோடி மதிப்பில் புத்துயிர் பெற்றது. மேலும் ரூ. 10 கோடி மதிப்பில் அடுத்த திட்டங்கள் தயார் நிலையில் உள்ளதாக கம்பம் நகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கம்பத்தில் உள்ள 33 வார்டுகள் உள்ளது. இதில் 26 வார்டுகளை திமுக கூட்டணி கைப்பற்றியது. இதனால் திமுகவை சேர்ந்த வனிதா நெப்போலியன் நகர் மன்ற தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். கடந்த பத்து ஆண்டுகளாக அதிமுக ஆட்சிகாலத்தில் கண்டு கொள்ளாமல் முடக்கிவைக்கப்பட்ட திட்டங்களை கம்பம் நகராட்சி தலைவராக பொறுப்பேற்ற பிறகு 5 மாதத்தில் ரூ.12 கோடி மதிப்பில் புத்துயிர் கொடுத்துள்ளார்.

அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் கம்பம் முகைதீன் ஆண்டவர்புரம் பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் ரூ.35 லட்சம் செலவில் இரண்டு ஆய்வுக்கூடமும், ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் மற்றொரு ஆய்வுக்கூடமும் கட்டப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து அரை நூற்றாண்டு காலமாக கம்பத்தில் அடையாளமாக திகழ்ந்த கம்பம் வாரசந்தையில் தற்போது நவீன கட்டமைப்பு வசதிகளுடன் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.7 கோடியே 75 லட்சம் மதிபீட்டில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

அதே போல கம்பம் நந்த கோபலன் மேற்கு தெருவில் உள்ள ஆலமரத்து பள்ளியில் நமக்கு நாமே திட்டத்தில் 6 வகுப்புறைகளுக்கு 76 லட்சம் ஒதுக்கீட்டில் கட்டுமானப்பணி நடந்து வருகிறது.

கம்பம் நகராட்சிக்குட்பட்ட தெருக்களில் புதிய குடி நீர் இணைப்பு மற்றும் குடி நீர் மராமத்து பணிக்காக ரூ.92 இலட்சத்தில் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

கம்பத்தில் மிக முக்கியமான விஷயமாக கம்பம் சேனை ஓடை பார்க்கப்படுகிறது.

 சுமார் 70 வருடங்களுக்கு முன் கம்பமெட்டு மலையடிவாரத்தில் உருவாகும் காட்டற்று வெள்ளத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திருப்பி விட ஏதுவாக அமைக்கப்பட்ட சேனை ஓடை நாளடைவில் ஒட்டு மொத்த சாக்கடை கழிவு நீர் ஓடையாக மாறி போனது.

 இதனை தூர்வாரி விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என கம்பம் நகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நகராட்சி பொறியாளர்கள் ஆலோசனைப்படி சேனை ஓடையை சுத்தம் செய்து ஓடையின் இருபுறமும் மதில் சுவர் எழுப்பி அதில் சோலார் மூலம் மின்சாரம் தயாரிக்க தமிழக அரசுக்கு வரைவு திட்டம் ஒன்றினை கம்பம் நகராட்சி சார்பில் அனுப்பி வைக்கப்படட்டுள்ளது.

கம்பம் நகராட்சிகுட்பட்ட பகுதிகளில் மட்டும் நாளொன்றுக்கு சுமார் 25 டன் குப்பை சேருகிறது. இந்த குப்பையை உரமாக்கி விவசாயிகளுக்கு இலவச உரம் வழங்க ரூ.5 கோடி மதிப்பீட்டில் திட்டத்தை தயாரித்து தமிழக அரசு ஒப்புதலுக்கு அனுப்பி வைத்துள்ளது. அதே போல முல்லைப்பெரியாற்று நீரை லோயர்கேம்ப் மற்றும் சுருளிப்பட்டி நீரேற்று நிலையங்கள் மூலமாக வழங்கப்படுகிறது.

அவற்றை நவீனப்படுத்தி சுகாதாரமான முறையில் பொதுமக்களுக்கு வழங்க இரண்டரை கோடி மதிப்பீட்டில் தமிழக அரசு ஒப்புதலுக்கு அனுப்பி உள்ளனர். மேலும் தமிழக அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள திட்டங்களுக்கு விரைவில் அனுமதிகிடைத்து பணிகள் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 மேலும் 10 ஆண்டுகளாக எந்த வித மக்கள் நல திட்டங்களும் தொடங்கபடாமல் இருந்த கம்பம் நகராட்சியில் 5 மாதத்தில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்திய நகர்மன்றத்தலைவருக்கு பொதுமக்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

மக்கள் கையில் நகராட்சி

கம்பம் நகர்மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் கூறுகையில், ‘‘மக்கள் கையில் நகராட்சி என்ற திட்டத்தின் கீழ் திமுக அரசின் செயல்பாடுகளை பொதுமக்கள் அறியும் வண்ணம் மிக எளிதாகவும் விரைவாகவும் மக்கள் பிரச்னைகள் தீர்க்கப்படுகிறது. தமிழக முதல்வர் ஆணைப்படி 5 மாதத்தில் ரூபாய் 12 கோடியில் கம்பம் நகர மக்களுக்கு நலத்திட்ட பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன. இன்னும் 10 கோடியில் புதிய திட்டங்கள் வெகு விரைவில் வர இருக்கின்றன.

இவ்வாறான நலத்திட்ட பணிகளால் கம்பம் நகர பொதுமக்கள் மத்தியில் திமுக அரசின் சாதனைகள் எளிதாக சென்றடைகிறது. கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சிக்காலத்தில் கம்பம் நகராட்சிக்கு எந்த ஒரு நலத்திட்டமும் செய்யவில்லை. ஆனால் திமுக நகர்மன்றத்தை கைப்பற்றியதும் கம்பம் நகரில் வியக்க தக்க நலப்பணிகள் நடக்கின்றன’’ என்றார்.

Related Stories: