பெட்ரோல் பாட்டிலுடன் வந்த முதியவர்-ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

ஊட்டி : சுதந்திர தினத்தன்று சிலர் சாதி பெயரை சொல்லி திட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெட்ரோல் பாட்டிலுடன் ஊட்டி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த முதியவரால் பரபரப்பு ஏற்பட்டது. கோத்தகிரி அருகேயுள்ள கடசோலை பகுதியை சேர்ந்தவர் ரங்கசாமி(75), இவர் நேற்று ஊட்டி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். திடீரென கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஒரு பாட்டிலில் கொண்டு வந்த பெட்ரோலை வெளியில் எடுத்தார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவரிடம் இருந்த பெட்ரோல் பாட்டிலை பிடிங்கிவிட்டனர். கலெக்டர் அலுவலக வளாகத்திற்கு பெட்ரோல் பாட்டிலுடன் முதியவர் வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து ரங்கசாமி கூறியதாவது:நான் கடசோலை கிரமாத்தை சேர்ந்தவன். கடந்த ஆகஸ்ட் மாதம் 26ம் தேதி எங்கள் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் சுதந்திர தின விழா நடந்தது.அப்போது, பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. ஆனால், விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் தவிர மற்ற ஆசிரியர்கள் யாரும் வரவில்லை. இதனால், ஏன் விழாவிற்கு ஆசிரியர்கள் வரவில்லை என்று கேட்டேன்.

மேலும், இது போன்று விழா நடக்கும் நாள் மற்றும் பள்ளிக்கு முறையாக ஆசிரியர்கள் வரவில்லை என்றால் மாணவர்கள் எப்படி படிப்பார்கள் என தலைமை ஆசிரியிரிடம் கேட்டேன். அப்போது, அதே பகுதியை சேர்ந்த கவுன்சிலர் நாகராஜ் உட்பட சிலர் என்னை சாதி பெயரை சொல்லி தாக்கிவிட்டனர். இதனால், காயம் அடைந்த நான் மருத்துவமனை சென்று சிகிச்சை எடுத்துக் கொண்டேன்.

என்னை தாக்கியவர்கள் மீது நடவடிக்ைக எடுக்க வேண்டும் என சோலூர்மட்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதேபோல், மாவட்ட நிர்வாத்திடமும் புகார் அளித்தேன். ஆனால், நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை.

எனவே, என்னை சாதி பெயரை சொல்லி இழிவுப்படுத்தி தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தீ குளிக்க முயற்சி செய்தேன். அதற்குள் போலீசார் நான் வைத்திருந்த பெட்ரோல் பாட்டிலை பிடிங்கிவிட்டனர், என்றார். முதியவர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீ குளிக்க முயற்சி செய்ததை தொடர்ந்து, ஊட்டி ஜி1 போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: