ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் நள்ளிரவில் புகுந்து 19 கடைகளில் கொள்ளையடித்த வாலிபர் கைது-ரூ.30 ஆயிரம் பறிமுதல்

ஊட்டி : ஊட்டி நகராட்சி மார்க்கெட் வளாகத்தில் உள்ள 19 கடைகளில் நள்ளிரவில் பட்டா கத்தியுடன் புகுந்து ரூ.30 ஆயிரம் கொள்ளையடித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

நீலகிரி மாவட்டம் ஊட்டி மணிகூண்டு பகுதியில் நகராட்சி மார்க்கெட் வளாகம் உள்ளது. இந்த வளாகத்தில் மட்டும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. துணிக்கடைகள், மளிகை கடைகள், காய்கறி கடைகள் உள்ளிட்ட பல்வேறு வகையாக கடைகள் உள்ளன. பெரும்பாலான காய்கறி கடைகள் வியாபாரம் முடிந்தவுடன் தார்பாய் கொண்டு மூடப்பட்டிருக்கும்.

 மார்க்கெட் வெளிப்பகுதியில் காவலாளிகள் இருப்பார்கள்.

இந்நிலையில் கடந்த 25ம் தேதி நள்ளிரவு 1 மணியளவில் மார்க்கெட் வளாகத்தில் குல்லா மற்றும் முகக்கவசம் அணிந்தபடி கையில் பட்டாகத்தி, இரும்பு கம்பியுடன் புகுந்த மர்ம நபர் ஒருவர் பூட்டி இருந்த 19 கடைகளுக்குள் புகுந்து கொள்ளையில் ஈடுபட்டார். இச்சம்பவம் மார்க்கெட் வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

ஊட்டி பி1 காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மணிக்குமார் தலைமையிலான போலீசார் மார்க்கெட் வளாகத்தில் திருட்டு சம்பவம் நடைபெற்ற கடைகளில் ஆய்வு செய்தனர். ஒரு கடையில் இருந்த ரூ.30 ஆயிரம் பணம் திருடு போயிருந்தது கண்டறியப்பட்டது. மற்ற கடைகளுக்குள் கொள்ளையன் சென்று பார்த்ததும் அங்கு பணம் இல்லாததால் பணம் கொள்ளை போகவில்லை என்பதும் தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கொள்ளையரை தேடி வந்தனர்.  இந்த நிலையில் போலீசார் நேற்று காலை ஊட்டி மத்திய பஸ் நிலையம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித்திரிந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதனால் அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் ஊட்டி பாம்பே கேசில் பகுதியைச் சேர்ந்த மனோஜ் (21) என்பதும், மார்க்கெட் வளாகத்தில் புகுந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர் என்பதும் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிந்து மனோஜை கைது செய்தனர்.

Related Stories: