திருப்பத்தூரில் பஸ்சில் தொங்கியபடி மாணவர்கள் ஆபத்தான பயணம்-காவல்துறை நடவடிக்கைக்கு கோரிக்கை

திருப்பத்தூர் : திருப்பத்தூர் பகுதிகளில் பேருந்துகளில் படியில் பயணம் செய்தும் பேருந்து பின்புறம் உள்ள ஏணியில் பயணம் மேற்கொள்ளும் அவலம் நாள்தோறும் அரங்கேறி வருகிறது. மாவட்ட காவல்துறை சார்பில் விபத்து குறித்து பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினாலும்.   இளைஞர்கள் மத்தியில் செவிடன் காதில் ஊதிய சங்கு போல் தான் இருந்து வருகிறது. நேற்று திருப்பத்தூர் அடுத்த கந்திலி அருகே உள்ள கரியம்பட்டி அரசு கலைக்கல்லூரி பகுதி மாணவர்கள் பலர் கிருஷ்ணகிரியில் இருந்து திருப்பத்தூர் நோக்கி வரும் அரசு பேருந்தில் படியில் தொங்கியவாறு வந்து கொண்டிருந்தனர்.

 மேலும் ஒரு சில மாணவர்கள் பேருந்தின் பின்பக்க படிக்கட்டில் தொங்கிக்கொண்டு உயிருக்கு ஆபத்தான முறையில் பயணத்தை மேற்கொண்டனர். இதனை அரசு ஓட்டுநர் மற்றும் நடத்துனர் யாரும் கண்டு கொள்ளாமல் இருந்து வந்தனர். கிருஷ்ணகிரி மேம்பாலம் அருகே இறங்கும்போது அசுர வேகத்தில் சென்ற பேருந்து பார்த்து பலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் இந்த ஆபத்தான பயணத்தை குறித்து வெளியிட்டுள்ளனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘நாள்தோறும் கல்லூரி மாணவர்கள் இது போன்ற விபரீத விளையாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.எனவே இந்த பகுதியில் போக்குவரத்துக் காவலர்களை நியமித்து இதுபோல் படிகளில் தொங்கி  மாணவர்கள் பயணம் செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: