ஆம்பூர் அருகே தனியார் காலனி தொழிற்சாலையில் தீ விபத்து... பலகோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்

திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே தனியார் காலனி தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பலகோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த சின்னவரிக்கம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான காலனி தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்றிரவு தொழிற்சாலையில் உதிரிபாகங்கள் வைக்கப்பட்டிருந்த குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனை கண்ட தொழிற்சாலையில் பணிபுரிந்து கொண்டிருந்த தொழிலாளர்கள் அலறி அடித்து தொழிற்சாலையை விட்டு வெளியேறினர்.

எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் இருப்பதால் மாமழவென பரவிய தீ கொழுந்து விட்டு எரிந்தது. தகவலின் பேரில் வாணியம்பாடி, ஆம்பூர், பெர்ணாம்பெட், குடியாத்தம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 18-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் 11 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்தில் பலகோடி மதிப்பிலான காலனி உதிரி பாகங்கள் எரிந்து சேதமடைந்தன. தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.     

Related Stories: