தென்கொரியா வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து: 7 பேர் பலி; 5 பேர் படுகாயங்களுடன் மீட்பு

சியோல்: தென்கொரியாவில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 7 பேர் உடல் கருகி பலியாகினர். தலைநகர் சியோலை அடுத்துள்ள டேஜியான் என்ற நகரில் உள்ள வணிக வளாகம் ஒன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கட்டடத்தின் தரைத்தளத்தில் கார்களை நிறுத்தும் இடத்தில் ஏற்பட்ட தீ காற்று பலமாக வீசியதால் மற்ற தளங்களுக்கும் மளமளவென பரவியது. விபத்து குறித்து தகவல் அறிந்த சியோல் மற்றும் டேஜியான் நகர தீயணைப்பு படையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வர போராடினர். வளாகத்தில் சிக்கி இருந்த ஏராளமானோரை தீயணைப்பு வீரர்கள் காப்பாற்றி கட்டிடத்தில் இருந்து வெளியேற்றினர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருகில் உள்ள கட்டிடங்களில் இருந்த மக்கள் வெளியேற்றப்பட்டனர். பலமணி நேர போராட்டத்திற்கு பிறகு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் கட்டடத்தின் தரைதளத்தில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் 7 பேர் உடல்கருகி உயிரிழந்தனர். தீ விபத்து நேரிட்டது காலை  நேரம் என்பதால் வணிக வளாகத்தில் வாடிக்கையாளர்கள் யாரும் இல்லை. இதனால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டதாக தெரிவித்துள்ள காவல் அதிகாரிகள் விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். 

Related Stories: