பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரூ.2.40 கோடி மதிப்பீட்டில் ஏரிகளில் சீரமைப்பு பணி: கலெக்டர் தொடங்கி வைத்தார்

சென்னை: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வெள்ள பாதிப்புகளை தவிர்க்கும் பொருட்டு செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் சென்னை மாவட்டத்திற்குட்பட்ட நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள ஏரிகள் மற்றும் கால்வாய்களை ரூ.3.90 கோடி மதிப்பீட்டில் (16 பணிகள்) தூர்வாரி மேம்படுத்திட அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது,

இதன்படி, செங்கல்பட்டு மாவட்டத்திற்குட்பட்ட நன்மங்கலம், கீழ்க்கட்டளை, செம்பாக்கம், சிட்லப்பாக்கம், தையூர், மானாமதி, பெரும்பாக்கம் ஆகிய ஏரிகளின் உபரிநீர் கால்வாய், திருநீர்மலை நாட்டு கால்வாய், பாப்பான் கால்வாய் ஆகிய 9 கால்வாய்களில் மிதக்கும் தாவரங்கள் மற்றும் குப்பை கழிவுகளை அகற்றி 16.672 கி.மீ நீளத்திற்கு தூர்வாரப்பட உள்ளது.

மேலும் நீஞ்சல் மடுவு, நந்திவரம், மண்ணிவாக்கம், சேலையூர், செம்பாக்கம், சிட்லப்பாக்கம் ஏரிககளை பராமரிக்கவும், பீர்க்கன்கரணை, சேலையூர், ராஜகீழ்பாக்கம், தாம்பரம் பெரிய ஏரி, தாம்பரம் சித்தேரி, தாம்பரம் புது தாங்கல், முடிச்சூர் பெரிய ஏரி, முடிச்சூர் சித்தேரி, இரும்புலியூர், பல்லாவரம், நெமிலிச்சேரி, கீழ்க்கட்டளை, கோவிலம்பாக்கம் மற்றும் எஸ். கொளத்தூர் ஆகிய ஏரிகளில் மிதக்கும் தாவரங்கள் மற்றும் குப்பைகளை அகற்றிடும் பணிகளை ரூ.2.40 கோடியில் மேற்கொள்ள ஆணையிடப்பட்டுள்ளது. மேற்கண்ட பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளி தற்பொது கோரப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று 9.65 கி.மீ நீளத்திற்கு பொன்விளைந்த களத்தூர் கால்வாய் மற்றும் 2.60 கி.மீ நீளத்திற்கு மேலமையூர் கால்வாயில் பொன்விளைந்த களத்தூர் ஏரி ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் கால்வாயில் உள்ள மிதக்கும் தாவரங்கள் மற்றும் குப்பைகளை அகற்றி தூர்வாரும் பணியினை மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து, புறநகர் பகுதிகளில் உள்ள ஏரிகளில் சீரமைப்பு பணி நடைபெற உள்ளது. இப்பணி மேற்கொள்ளப்படுவதினால் 15 ஏரிகள் முழுவதுமாக நிரம்பி 5,136 ஏக்கர் பாசன நிலங்கள் பலன் அடையும். மேலும், மேற்கண்ட பணிகள் அனைத்தும் 2022 வடகிழக்கு பருவமழை காலத்திற்குள் முழுவதுமாக செய்து முடிக்கப்பட்டு அப்பகுதிகளை சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்படாவண்ணம் பாதுகாக்கப்படும், என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: