கொல்கத்தா செல்ல வந்த மேற்குவங்க பெண் மயங்கி விழுந்து பலி: விமான நிலையத்தில் பரபரப்பு

சென்னை: கொல்கத்தா செல்ல வந்த மேற்குவங்க பெண், சென்னை விமான நிலையத்தில் திடீரென மயங்கி விழுந்து இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் நிர்மலா பசாரி (68). இவர், உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால் இவரது மகன் விஜெய் பசாரி, தாயை மருத்துவ சிகிச்சைக்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னைக்கு அழைத்து வந்தார். சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனையில் நிர்மலா பசாரி சிகிச்சை பெற்றார். இந்நிலையில், நிர்மலா பசாரி சிகிச்சை முடிந்து நேற்று மதியம் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். பின்னர் சென்னையிலிருந்து கொல்கத்தா செல்லும் தனியார் பயணிகள் விமானத்தில், சொந்த ஊர் திரும்ப மகன் விஜெய் பசாரி, தாயை அழைத்துக்கொண்டு சென்னை உள்நாட்டு விமான நிலையம் வந்தார். அங்கு பாதுகாப்பு சோதனை நடக்கும் பகுதிக்கு நடந்து வந்து கொண்டிருந்தனர்.

அப்போது, நிர்மலா பசாரி திடீரென மயங்கி விழுந்தார். உடனே மகன் விஜெய் பசாரி விமான நிலைய அதிகாரிகளுக்கு அவசர அவசரமாக  தகவல் கொடுத்தார். விமான நிலைய மருத்துவக் குழுவினர் விரைந்து வந்து நிர்மலா பசாரியை பரிசோதித்து அவர் இறந்துவிட்டதாக கூறினர். உடனடியாக சென்னை விமான நிலைய போலீசுக்கு தகவல் தரப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: