உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி மனைவியை உயிருடன் எரித்துக்கொல்ல முயற்சி: கணவனுக்கு வலை

பெரம்பூர்: கொளத்தூர் சன்னதி தெரு பகுதியைச் சேர்ந்தவர் சிவராமன் (52). இவர் கொளத்தூரில் உள்ள எவர்வின் பள்ளியில் வேன் அட்டெண்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஜீவ லட்சுமி (42) இவர்களுக்கு கவிதா (22), பிரியதர்ஷினி (19), ஆகிய 2 மகள்கள் உள்ளனர். ஜீவலட்சுமி தனது வீட்டில் எதிரே உள்ள சுரேஷ் என்பவருக்கு சொந்தமான மாவு கடையில் கடந்த 3 ஆண்டுகளாக மாவு அரைக்கும் வேலை செய்து வருகிறார். கணவர் சிவராமன் அடிக்கடி குடித்துவிட்டு ஜீவ லட்சுமியிடம் தகராறு செய்து வந்துள்ளார். மேலும் அவரது நடத்தையில் சந்தேகப்பட்டு அவ்வப்போது குடிபோதையில் கடும் வாக்குவாதத்திலும் ஈடுபட்டுள்ளார். இதனால் சில தினங்களுக்கு முன்பு மாவு கடைக்கு வேலைக்கு செல்லக்கூடாது என்று கூறியுள்ளார்.

மேலும், நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் 2 மகள்களும் மாத்தூரில் உள்ள அவர்களது பாட்டி வீட்டிற்கு சென்றுவிட்ட நிலையில், இரவு 10 மணி அளவில் வழக்கம் போல குடிபோதையில் வந்த சிவராமன் தனது மனைவியிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், ஜீவ லட்சுமி தொடர்ந்து தகராறில் ஈடுபட்டால் நான் இறந்து விடுவேன் எனக் கூறியுள்ளார். இதனால், ஆத்திரம் அடைந்த சிவராமன் வீட்டிலிருந்து மண்ணெண்னையை எடுத்து வந்து மனைவி மீது ஊற்றி தீயை பற்ற வைத்துவிட்டு வெளியே சென்றுவிட்டார். சிறிது நேரத்தில் வீட்டிலிருந்து கரும்புகை வருவதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் கூச்சலிட்டனர்.

உடனே பக்கத்து வீட்டில் உள்ள சுரேஷ் என்பவர் உள்ளே சென்று பார்த்தபோது ஜீவலட்சுமி தீயில் எரிந்து கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார் உடனடியாக தண்ணீரை ஊற்றி அனைத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு போய் சேர்த்தனர் அங்கு 30 சதவீதம் தீக்காயங்களுடன் ஜீவலட்சுமி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த ராஜமங்கலம் போலீசார்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், எழும்பூர் கூடுதல் மகிளா நீதிமன்ற நீதிபதி நேற்று முன்தினம் இரவே ஜீவலட்சுமியிடம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு நேரில்  சென்று வாக்கு மூலம் பெற்றுள்ளார். தொடர்ந்து ராஜமங்கலம் போலீசார் தப்பி ஓடிய சிவராமனை தேடி வருகின்றனர்.

Related Stories: