ரஷ்ய பள்ளியில் துப்பாக்கி சூடு: 15 பேர் பரிதாப பலி

மாஸ்கோ: ரஷ்யாவில் பள்ளியில் மர்மநபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 11 மாணவர்கள் உட்பட 15 பேர் கொல்லப்பட்டனர். 24 பேர் காயமடைந்தனர். துப்பாக்கி சூடு நடத்திய நபர் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு இறந்துவிட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மத்திய ரஷ்யாவின் இசேவ்ஸ்க் பகுதியில் உள்ள பள்ளியில் ஒன்று முதல் 11ம் வகுப்பு வரை மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளிக்குள் நேற்று மர்ம நபர் ஒருவன் துப்பாக்கியுடன் நுழைந்துள்ளான். அங்குள்ள மாணவர்களை நோக்கி அவன் கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளான். இந்த துப்பாக்கி சூட்டில் 11 சிறுவர்கள் உட்பட 15 பேர் பரிதாபமாக பலியானார்கள். மேலும் 14 சிறுவர்கள் உட்பட 24 பேர் காயமடைந்தனர்.

துப்பாக்கி சூடு நடத்திய நபர் கருப்பு நிற டீ சர்ட் அணிந்திருந்துள்ளான். அதில் நாஜி சின்னம் பொறிக்கப்பட்டு இருந்துள்ளதாக சம்பவத்தை பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். துப்பாக்கி சூடு நடத்திய சிறிது நேரத்தில் அங்கிருந்த வகுப்பறையிலேயே அந்த நபர் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு இறந்துவிட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால் மர்ம நபர் யார் என இன்னும் அடையாளம் காணப்படவில்லை. இந்த துப்பாக்கி சூடு குறித்து விசாரணை கமிட்டி தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளது. பலியான மாணவர்களின் குடும்பத்தினருக்கு ரஷ்ய அதிபர் புடின் இரங்கல் தெரிவித்துள்ளார். சமீபகாலமாக ரஷ்யாவில் இதுபோன்று பள்ளியில் துப்பாக்கி சூடு நடக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: