பாக்.குக்கு எப்-16 போர் விமானம் தீவிரவாதத்தை ஒடுக்க என சொல்லி முட்டாளாக்காதீங்க: அமெரிக்காவை சாடிய ஜெய்சங்கர்

வாஷிங்டன்: ``தீவிரவாதத்தை ஒடுக்கவே பாகிஸ்தானுக்கு எப்-16 போர் விமானங்களை வழங்கியதாக சொல்லி யாரையும் முட்டாளாக்காதீங்க,’’ என்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அமெரிக்காவை கடுமையாக சாடியுள்ளார். பாகிஸ்தானுக்கு தீவிரவாதத்தை ஒடுக்குவதற்காக என்று அமெரிக்கா எப்-16 போர் விமானங்களை கடந்த 1983ம் ஆண்டு வழங்கியது. ஆனால், பாகிஸ்தான் தீவிரவாதிகளின் புகலிடமாக விளங்குவதால், அந்நாட்டிற்கான ராணுவ நிதிக்கு டிரம்ப் தடை விதித்தார். தற்போதைய அதிபர் பைடன் அந்த தடை உத்தரவை கடந்த 8ம் தேதி ரத்து செய்தார். இதையடுத்து, எப்-16 விமானங்களை மேம்படுத்த ரூ.3,600 கோடி நிதி வழங்குவதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.

இந்நிலையில், ஐநா பொதுசபை கூட்டத்தில் கலந்துகொள்ள அமெரிக்கா சென்ற ஒன்றிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அங்கு வசிக்கும் இந்திய வம்சாவளியினரை சந்தித்து கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், ``பாகிஸ்தானுக்கு எதற்காக எப்-16 போன்ற அதிக திறன் கொண்ட போர் விமானங்கள் அளிக்கப்பட்டன. அதை அவர்கள் எதற்கு பயன்படுத்துகிறார்கள் என்று அனைவருக்கும் தெரியும். எனவே தீவிரவாதத்தை ஒடுக்க என சொல்லி அமெரிக்கா யாரையும் முட்டாளாக்க நினைக்க வேண்டாம்,’’ என்று கடுமையாக சாடினார். மேலும், அமெரிக்க ஊடகங்கள் இந்தியா பற்றிய செய்திகளை பாரபட்சத்துடன் வெளியிடுவதாகவும் அவர் வேதனை தெரிவித்தார்.

Related Stories: