கள்ளக்குறிச்சி மாணவி விவகாரம் விரிவாக விசாரிக்க வழக்கு ஒத்திவைப்பு

புதுடெல்லி: கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான விவகாரத்தை தசரா விடுமுறைக்கு பின்னர் விரிவாக விசாரிப்பதாக கூறி உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் மாணவி ஸ்ரீமதி கடந்த மாதம் மர்மமான முறையில் உயிரிழந்தார். மாணவியின் மரணம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் ஜாமீன் வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தனர். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் பள்ளி தாளாளர் உட்பட 4 பேருக்கு கடந்த மாதம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

இந்த உத்தரவுக்கு எதிராக மாணவி ஸ்ரீமதியின் தாயார் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் பி.ஆர்.கவாய், நாகரத்தனா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், இந்த வழக்கை விரிவாக விசாரிக்க வேண்டும் என்பதால் வேறு தேதிக்கு ஒத்திவைக்க வலியுறுத்தினார். கோரிக்கையை ஏற்பதாக தெரிவித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை தசரா பண்டிகை விடுமுறைக்கு பின்னர் ஒத்திவைத்தனர்.

Related Stories: