திருவனந்தபுரத்தில் நாளை முதல் டி20 போட்டி

திருவனந்தபுரம்: இந்தியா - தென் ஆப்ரிக்கா மோதும் முதல் டி20 போட்டி, திருவனந்தபுரம் கிரீன்பீல்ட் ஸ்டேடியத்தில் நாளை நடைபெறுகிறது. இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணி தலா மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடுகிறது. முதல் டி20 போட்டி திருவனந்தபுரம் கிரீன்பீல்ட் ஸ்டேடியத்தில் நாளை நடைபெறுகிறது. இப்போட்டியில் கலந்து கொள்வதற்காக தெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்ரிக்க வீரர்கள் நேற்று முன்தினமும், ரோகித் ஷர்மா தலைமையிலான இந்திய வீரர்கள் நேற்று மாலையும் திருவனந்தபுரம் வந்தனர். அவர்களுக்கு திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

நாளைய போட்டிக்காக கிரீன்பீல்ட் ஸ்டேடியம் முழு அளவில் தயாராகி உள்ளது. 35 ஆயிரம் ரசிகர்கள் அமர்ந்து பார்க்க வசதி ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், 80 சதவீதம் டிக்கெட்கள் விற்பனையாகிவிட்டதாக கேரள கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது. நாளை இரவு 7.00 மணிக்கு போட்டி தொடங்குகிறது. சமீபத்தில் ஆஸ்திரேலியாவுடன் நடந்த டி20 தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியதால், தென் ஆப்ரிக்க அணிக்கு எதிராகவும் வெற்றிகளைக் குவிக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Related Stories: