உபர் ஆட்டோவில் பயணித்தபோது பெண்ணுக்கு ஓட்டுநர் பாலியல் தொல்லை: சமூக வலைதளத்தில் வைரலான பதிவு

சென்னை: உபர் ஆட்டோவில் பயணித்தபோது ஓட்டுநர் பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் ஒருவர் டிவிட்டரில்.பதிவு செய்தது பரபரப்பாகியுள்ளது. சென்னை தரமணியில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவ பத்திரிகையாளராக படித்து வரும் பெண், டிவிட்டரில் இக் குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளார். சோழிங்கநல்லூரில் தனியார் ஓட்டலில் தங்கி இருக்கும் அவர், தோழி ஒருவருடன் இசிஆரிலிருந்து நேற்று இரவு, தான் தங்கியிருந்த ஓட்டலுக்கு உபர் ஆட்டோவில் வந்துள்ளார். ஓட்டல் வந்தவுடன் இறங்கும் போது ஆட்டோ ஓட்டுனர் தன்னிடம் தவறாக நடந்து, பாலியல் தொல்லை அளித்ததாக கூறியுள்ளார். தன்னை காப்பாற்றுமாறு கதறியதாகவும் உதவிக்கு யாரும் வரவில்லை என்று பதிவிட்டுள்ளார். அதன் பின் காவல்துறையில் புகார் அளித்தும் அரை மணி நேரம் கழித்து பெண் போலீசார் இல்லாமல் காவலர் ஒருவர் விசாரணை மேற்கொண்டதாக வும் கூறியுள்ளார்.

மேலும், தான் தங்கியிருக்கும் ஓட்டலில் ஊழியர்களுடன் சம்பந்தப்பட்ட செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் அளிக்க முற்பட்டபோதும் அதை தடுக்கும் விதமாகவே காவலர் பேசியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். அதன்பின் செம்மஞ்சேரி காவல் நிலையத்திற்கு சென்ற பிறகும் இரவு நேரத்தில் காவல் நிலையத்திற்குள் பெண்களை அனுமதிக்க முடியாது என்ற அடிப்படையில் காவல் நிலையத்தில் வெளியிலேயே புகாரை எழுதி வாங்கிக் கொண்டனர். நேற்று காலை பெண் போலீஸ் ஒருவர், ஓட்டலுக்கு வந்து விசாரணை மேற்கொண்டார். ஆனால் இந்த விவகாரம் தொடர்பாக தொடர்ந்து தொடர்பு கொள்ள எந்தவித செல்போன் எண்ணையும் பெண் காவலர் தரவில்லை என்று காவல்துறை சமூக வலைதள பக்கங்களை இணைத்து புகார் அளித்துள்ளார். சம்பந்தப்பட்ட ஆட்டோ புகைப்படம் மற்றும் உபர் ஆட்டோவில் பயணித்தது தொடர்பான தகவல்கள், பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ ஓட்டுனர் புகைப்படம் உள்ளிட்ட  அனைத்தையும் அவர் இணைத்திருந்தார்.

இந்த பதிவு சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. இதற்கு பதில் அளித்த சென்னை காவல்துறை , தாம்பரம் எல்லைக்குட்பட்ட பகுதியில் சம்பவம் நடந்துள்ளதால், சம்பந்தப்பட்ட தாம்பரம் காவல்துறைக்கு டாக் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக உபர் நிறுவனமும் சமூக வலைதளம் மூலமாக பாதிக்கப்பட்ட பெண்ணிடம் நடந்த விவகாரம் தொடர்பாக தகவல்களை் கேட்டுள்ளது. இவ்விவகாரம் தொடர்ந்து சமூக வலைதளத்தில் வைரலாக பரவியதையடுத்து, செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ ஓட்டுநரை தேடி வருவதாக தாம்பரம் காவல்துறை தெரிவித்துள்ளது.

Related Stories: