சேலம் அருகே பரபரப்பு சம்பவம் காதலனிடமிருந்து மீட்கப்பட்ட 17 வயது சிறுமி மர்மச்சாவு: ஆணவக்கொலை செய்துவிட்டு தாய் தற்கொலை நாடகமாடுவதாக புகார்

அயோத்தியாபட்டணம்: சேலம் அருகே காதலன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட நிலையில் சிறுமி வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார். அவரை கொலை செய்து விட்டு தாயார் விஷம் குடித்து தற்கொலை நாடகமாடுவதாக உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டணம் அருகே பெரியகவுண்டாபுரத்தை சேர்ந்தவர் அறிவழகன். இவரது மகள் ஸ்ரீதேவி (17). 9ம் வகுப்பு படித்து விட்டு வீட்டில் இருந்துள்ளார். இவரும், அதே பகுதியைச் சேர்ந்த சம்பத்(22) என்பவரும் காதலித்தனர். கடந்த 19ம் தேதி திருமணம் செய்து கொள்வதாக கூறி ஸ்ரீதேவியை சம்பத், சேலத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு கடத்திச்சென்றுள்ளார்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் புகாரின்படி காரிப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து சேலத்தில் சம்பத்தின் உறவினர் வீட்டில் இருந்த ஸ்ரீதேவியை மீட்டனர். போக்சோ பிரிவின் கீழ் சம்பத்தை கைது செய்து சேலம் சிறையிலடைத்தனர். சிறுமிக்கு வேறு ஒருவருடன் திருமணம் செய்து வைக்க பெற்றோர் ஏற்பாடு செய்துள்ளனர். இதற்கு ஸ்ரீதேவி மறுப்பு தெரிவித்து வந்தார். இந்நிலையில், சிறுமியின் தாய் சேமலா (36) நேற்று முன்தினம் இரவு 12 மணியளவில் அரளி விதையை அரைத்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு மின்னாம்பள்ளியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். மனைவிக்கு துணையாக மருத்துவமனையில் இருந்த அறிவழகன் நேற்று காலை வீட்டிற்கு வந்தார்.

அப்போது, மகள் ஸ்ரீதேவி வீட்டில் சடலமாக கிடந்தார். தகவலின்பேரில், காரிப்பட்டி போலீசார் சென்று ஸ்ரீதேவியின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்க முயன்றனர். அப்போது, சம்பத்தின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் என 200க்கும் மேற்பட்டோர் ஆம்புலன்சை மறித்து மறியலில் ஈடுபட்டனர். திருமணத்திற்கு மறுத்த சிறுமி ஸ்ரீதேவியை பெற்றோர் ஆணவக் கொலை செய்து விட்டு, தாயார் விஷம் குடித்து தற்கொலை முயற்சி நாடகமாடுவதாக குற்றம்சாட்டினர். வாழப்பாடி டிஎஸ்பி ஸ்வேதா பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானப்படுத்தினார். தொடர்ந்து ஸ்ரீதேவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுபற்றி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஸ்ரீதேவி விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டாரா அல்லது விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்டாரா என்பது பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். நேற்று மாலை பிரேதபரிசோதனை முடிந்து தந்தை மற்றும் உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கை வர இன்னும் இரண்டு நாள் ஆகும் எனவும் அதன் அடிப்படையில் விசாரணை தீவிரப்படுத்தப்படும் எனவும் போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: