மரக்கன்று நட்டதாக ரூ.50 லட்சம் மோசடி திண்டுக்கல் சீனிவாசன் மீது விசாரணை நடத்த வேண்டும்: மார்க்சிஸ்ட் கட்சி மனு

திண்டுக்கல்: மரக்கன்று நட்டதாக ரூ.50 லட்சம் மோசடி நடந்துள்ளது குறித்து, முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது விசாரணை நடத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திண்டுக்கல் மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம் தலைமையில் நேற்று அக்கட்சியினர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் கலெக்டர் விசாகனிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: திண்டுக்கல்லில் உள்ள மலைக்கோட்டையை பசுமையாக மாற்ற முன்னாள் அதிமுக அரசு முடிவு எடுத்து 2017-2018ம் ஆண்டு வனத்துறை மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது. பாறைகளில் வளரக்கூடிய அத்தி, அரசு, ஆல், இஞ்சி, கல் இஞ்சி உள்ளிட்ட மர வகைகளை நடவு முறையை பயன்படுத்தி நட்டனர். இதற்கு மரம் ஒன்றிற்கு ரூ. 1,000 வீதம் 5,000 மரக்கன்றுகளை ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் நட்டதாக கூறப்பட்டது. தற்போது இத்திட்டம் குறித்து ஆய்வு செய்தபோது நடப்பட்ட 5,000 மரக்கன்றுகளில் ஒன்று கூட முளைக்கவில்லை.  மேலும் இங்கு நடப்பட்டதற்கான சாட்சியாக காலி டிரம்களும் சொட்டுநீர் பாசனக் குழாய்களும் மலையடிவாரத்தில் காட்சி பொருளாக உள்ளன. அரசுக்கு சொந்தமான ரூ.50 லட்சம் நிதி வீணடிக்கப்பட்டு. பசுமையாக்கும் திட்டத்தில் மோசடி நடந்துள்ளது. இதுகுறித்து அப்போதைய வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

Related Stories: