திருப்பதி கோயிலில் பிரமோற்சவம் இன்று தொடக்கம்: 3 அடுக்கு சோதனைக்கு பின் அனுமதி

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று பிரமோற்சவம் தொடங்க உள்ளதையொட்டி 3 அடுக்கு சோதனைக்கு பிறகு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும். மேலும், கருட சேவையில் ஆரத்தியில்லை என்று முதன்மை பாதுகாப்பு அதிகாரி நரசிம்மகிஷோர் தெரிவித்துள்ளார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரமோற்சவம் இன்று தொடங்கி 9 நாட்கள் நடைபெற உள்ளது. இதுதொடர்பாக, திருமலை அன்னமய்யா பவனில் முதன்மை பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு அதிகாரி நரசிம்மகிஷோர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: சமூக விரோதிகள் மற்றும் பிற அச்சுறுத்தல்களிலிருந்து பக்தர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த திருமலை திருப்பதி தேவஸ்தானம் 3 அடுக்கு சோதனை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செயல்படுத்தப்பட்டுள்ளது. முதலில் அலிபிரி சோதனைச்சாவடியிலும், பின்னர் ஏழுமலையான் கோயிலுக்குள்ளும், 4 மாடவீதிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. திருமலை முழுவதும் 2,200 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணிநேரமும் கண்காணிக்கப்பட உள்ளது. பிரமோற்சவத்திற்காக 5000 போலீசார், 460 சிறப்பு அதிரடிப்படை போலீசாருடன் தேவஸ்தான விஜிலென்ஸ் பாதுகாப்பு மேற்கொள்ளப்பட உள்ளது. திருமலையில் வாகனங்களின் எண்ணிக்கை பொருத்து போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க அலிபிரியிலேயே வாகனங்கள் நிறுத்தப்பட்டு அரசு பஸ் மூலம் திருமலைக்கு அழைத்து செல்லப்படும். கருட சேவை அதிக பக்தர்கள் காணும் விதமாக மாடவீதியில் ஆரத்தி வழங்குவது முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: