உபி, இமாச்சலில் டிராக்டர் டிராலி, வேன் கவிழ்ந்ததில் 17 பேர் பலி

லக்னோ: உத்தரப்பிரதேசம், இமாச்சலில் டிராக்டர் டிராலி மற்றும் வேன் கவிழ்ந்து 17 பேர் பலியாயினர். 47 பேர் காயமடைந்தனர். உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ அடுத்த உன்னாயி கிராமத்தில் உள்ள துர்கா தேவி கோயில் விழாவில் பங்கேற்க 47 பேர் டிராக்டர் டிராலி ஒன்றில் நேற்று பயணித்தனர். குறுகிய சாலை வளைவில் டிராக்டர் திரும்பும் போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து குளத்தில் கவிழ்ந்தது. குளத்தில் அதிகளவு தண்ணீர் இருந்ததால், குளத்தில் மூழ்கி 8 பெண்கள், 2 குழந்தைகள் உட்பட 10 பேர் பலியாகினர். 37 பேர் காயமடைந்தனர். விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிவாரண நிதியை மாநில அரசு அறிவித்துள்ளது. இதே போல, இமாச்சலப்பிரதேசத்தின் குல்லு  மாவட்டத்தில் சுற்றுலா பயணிகள் சென்ற வேன் நேற்று முன்தினம் இரவு  எதிர்பாராதவிதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில்  கவிழ்ந்தது. இதில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 10 பேர்  காயமடைந்தனர். விபத்தில் இறந்தவர்களில் 3 பேர் வாரணாசி ஐஐடியில் படித்து வரும் மாணவர்கள்  என அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு  பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: