அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை விரைவில் நடத்த திட்டம்: சென்னை தலைமை அலுவலகத்தில் மூத்த நிர்வாகிகளுடன் எடப்பாடி அவசர ஆலோசனை

சென்னை: அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே ஏற்பட்ட ஒற்றைத் தலைமை பதவிக்கான போட்டியில் எடப்பாடி பழனிசாமி கை ஓங்கி உள்ளது. பொதுக்குழு கூட்டத்தை நடத்தி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி தேர்வு செய்யப்பட்டார். இதை சென்னை உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் உச்ச நீதிமன்றம் சென்றுள்ளனர். அங்கு விரைவில் விசாரணை நடைபெற உள்ளது.இந்த பரபரப்பான சூழ்நிலையில், அதிமுகவில் அடுத்த கட்டமாக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலை நடத்த எடப்பாடி மற்றும் அவரது ஆதரவாளர்கள் முடிவு செய்து உள்ளனர். அதன்படி, விரைவில் தேர்தலை நடத்தி எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்வு செய்ய முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி நேற்று காலை 11 மணிக்கு சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு திடீரென்று வந்தார். முன்னதாக கட்சி அலுவலகத்துக்கு அதிமுக மூத்த நிர்வாகிகள் வந்திருந்தனர். அவர்கள் எடப்பாடி பழனிசாமியை உற்சாகமாக வரவேற்றனர். பின்னர் கூட்ட அரங்கில் மூத்த நிர்வாகிகளுடன் எடப்பாடி அவசர ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் தேர்தல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ள பொன்னையன், நத்தம் விசுவநாதன் மாவட்ட செயலாளர்கள் பாலகங்கா, விருகை ரவி, ராஜேஷ், வெங்கடேஷ் பாபு, கே.பி.கந்தன், சிட்லபாக்கம் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நேற்று நடந்த கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் நடத்தும் தேதி குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்படி, விரைவில் தேர்தல் தேதியை தேர்தல் அதிகாரிகள் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக அதிமுக கட்சி அலுவலகம் வந்த எடப்பாடி பழனிசாமி, அங்குள்ள பரிசு பொருட்கள் மற்றும் நாற்காலிகள் உடைக்கப்பட்டதை சீரமைத்து வரும் பணிகளை பார்வையிட்டார். பின்னர் கீழ்தளத்தில் எடப்பாடிக்கு ஒதுக்கப்பட்ட அலுவலகத்தில் அமர்ந்து சிறிது நேரம் மாவட்ட செயலாளர்கள் சிலருடன் பழனிசாமி பேசிக் கொண்டிருந்தார்.

Related Stories: