சென்னை காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில் சென்னையில் உள்ள லாட்ஜ், மேன்ஷன்களில் சோதனை: நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 3 குற்றவாளிகள் கைது

சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், சென்னையில் உள்ள 445 லாட்ஜ், மேன்ஷன்களில் சிறப்பு சோதனைகள் மேற்கொண்டு, சிறப்பு வாகனத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டு, விதிமீறலில் ஈடுபட்ட 52 வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 3 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் உத்தரவின்பேரில், சென்னை பெருநகரில் குற்றங்களை குறைக்கவும், தலைமறைவு குற்றவாளிகளை கைது செய்யவும், பழைய குற்றவாளிகளை கண்காணித்து, குற்றச் செயல்களில் ஈடுபடாமல் தடுக்கவும், பல்வேறு குற்ற தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    

இதன் தொடர்ச்சியாக, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள், சென்னையிலுள்ள தங்கும் விடுதிகளான லாட்ஜ், மேன்ஷன்களில் சோதனைகள் மேற்கொள்ளவும், முக்கிய இடங்களில் சிறப்பு வாகனத் தணிக்கைகள் மேற்கொள்ளவும் உத்தரவிட்டதன்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (25.09.2022) சிறப்பு தணிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

அதன்பேரில், சென்னை பெருநகரில் உள்ள 445 லாட்ஜுகள், மேன்ஷன்கள் என தங்கும் விடுதிகளில் காவல் குழுவினர் சோதனைகள் மேற்கொண்டனர். இச்சோதனையில், பழைய குற்றவாளிகள், சந்தேக நபர்கள், ஆயுதங்கள், போதை பொருட்கள் வைத்துள்ளனரா என்றும் அனுமதியின்றி மற்றும் விசா காலம் முடிந்து வெளிநாட்டினர் யாரேனும் தங்கி உள்ளனரா என்றும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டும், சந்தேக நபர்கள் அல்லது பொருட்கள் குறித்து தகவல் அறிந்தால் உடனே காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவும், உரிய அடையாள சான்று இல்லாத நபர்களுக்கு அறைகள் கொடுக்க வேண்டாம் எனவும் லாட்ஜ் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டது.  

மேலும், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர், நேற்று (25.09.2022) இரவு சென்னையிலுள்ள 98 முக்கிய இடங்கள் மற்றும் சந்திப்புகளில் தற்காலிக தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு, சிறப்பு வாகனத் தணிக்கைகள் மேற்கொண்டு, இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், இலகுரக மற்றும் கனரக வாகனங்கள் மற்றும் அவற்றில் பயணித்த நபர்கள் மீது சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

இச்சோதனையில், மது போதை, விதிமீறல் மற்றம் உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனங்கள் ஓட்டியது தொடர்பாக 52 வாகனங்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. மேலும், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 3 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2 நபர்கள் மீதும், திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட 2 குற்றவாளிகள் மீதும், சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்தது தொடர்பாக 2 வழக்குகளும், குட்கா விற்பனை செய்தது தொடர்பாக 2 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

சென்னை பெருநகர காவல்துறையின் இந்த சோதனைகள் தொடர்ந்து நடைபெறும் எனவும், குற்ற நபர்கள் அல்லது சந்தேக நபர்கள் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கும்படி, சென்னை பெருநகர காவல்துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

Related Stories: