மோதிரமலை - பேச்சிப்பாறை இடையே யானை அதிகம் நடமாடும் காட்டில் பெண்ணுக்கு ஆம்புலன்சில் பிரசவம்: ஆண் குழந்தை பிறந்தது

குலசேகரம்: கன்னியாகுமரி மாவட்டம்  கோதையாறு வனப்பகுதியில் உள்ள மோதிரமலை, கொலஞ்சிமடம் என்ற மலைவாழ் கிராமத்தை சேர்ந்தவர் நிஷாந்த். அவரது மனைவி அபிஷா (19). நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். கணவர் வெளியூர் சென்றிருந்த நிலையில் அபிஷாவுக்கு நேற்று இரவு பிரசவ வலி ஏற்பட்டு உள்ளது. இதனையடுத்து இரவு சுமார் 10 மணி அளவில் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்து உள்ளனர்.

பேச்சிப்பாறையில் இருந்து உடனே 108 ஆம்புலன்ஸ் கோதையாரில் உள்ள மலை கிராமத்துக்கு விரைந்து சென்றது. அங்கு பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருந்த அபிஷாவையும் அவரது உறவினர் 2 பேரையும் ஏற்றி  கொண்டு பேச்சிப்பாறை ஆரம்ப சுகாதார நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்தது. மோதிரமலை - பேச்சிப்பாறை இடையே சுமார் 15 கிமீ தூரம் உள்ளது.

சாலை குண்டும், குழியுமாக இருந்ததால் ஆம்புலன்ஸ் மெதுவாக சென்று கொண்டிருந்து. பேச்சிப்பாறை சிறோபாயின்ட் பகுதியில் உள்ள வனத்துறை சோதனை சாவடி அருகில் வரும்போது அபிஷாவுக்கு பிரசவ வலி அதிகரித்தது. அந்த பகுதி யானைகள், காட்டு விலங்குகள் அதிகம் நடமாடும் காட்டுப்பகுதி ஆகும். வேறு வழி இல்லாததால் ஓட்டுநர்  அஜீஸ்  ஆம்புலன்சை பாதுகாப்பாக ஓரமாக நிறுத்தினார்.

ஆம்புலன்ஸில் இருந்த அவசரகால மருத்துவ நுட்புநர்   சுஜின்ராஜ்  அபிஷாவுக்கு  சிகிச்சையளித்தார். அபிஷாவுக்கு ஆம்புலன்ஸில் வைத்து அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதனையடுத்து முதலுதவி சிகிச்சையளித்து  தாய், சேய் 2 பேரையும் பாதுகாப்பாக பேச்சிப்பாறை   அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர்.

Related Stories: