காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி ஜனநாயக ஆசாத் கட்சிக்கு சொந்தக்காரரானார் குலாம் நபி ஆசாத்... !!

ஸ்ரீநகர்: காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய அக்கட்சியின் மூத்த தலைவரரும் ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வருமான குலாம் நபி ஆசாத் தன் புதிய கட்சி தொடங்கினார். அவர் தனது புதிய கட்சிக்கு Democratic Azad party என்று பெயர் சூட்டியுள்ளார். கடந்த 2019 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தியின் குழந்தைத்தனமான நடவடிக்கைகளே காங்கிரஸ் கட்சி தோல்விக்கு காரணம் என்று குலாம் நபி ஆசாத் பகிரங்கமாக விமர்சித்து இருந்தார். மேலும் காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவராக இருந்த குலாம் நபி ஆசாத், கடந்த ஆகஸ்ட் மாதம், அக்கட்சியில் இருந்து விலகினார். இது தொடர்பான ராஜினாமா கடிதத்தை கட்சித் தலைவர் சோனியா காந்திக்கும் அவர் அனுப்பி வைத்தார்.

இதனால் காங்கிரஸ் கட்சியில் பல ஆண்டு காலமாக இருந்த குலாம் நபி ஆசாத் விலகியது, அக்கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இவரைத் தொடர்ந்து, ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் தலைவர்கள் 50-க்கும் மேற்பட்டோர் காங்கிரஸ் கட்சியில் இருந்து ராஜினாமா செய்தனர். இதனால் காங்கிரஸ் கட்சியில் கலகக் குரல் எழுப்பிய தலைவர்கள் ஜி23 தலைவர்கள் என அழைக்கப்பட்டனர். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய குலாம் நபி ஆசாத், ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலை மையமாகக் கொண்டு புதுக்கட்சியை தொடங்கப் போவதாக செய்திகள் வெளியாகிய நிலையில், அவரும் இந்தத் தகவலை உறுதிப்படுத்தி இருந்தார்.

இதற்காக காஷ்மீரில் தனது ஆதரவாளர்களை சந்தித்து ஆதரவையும் அவர் திரட்டினார். இந்நிலையில் இன்று, தனது புதிய கட்சி குறித்தான அறிவிப்பை அவர் வெளியிட்டார். தனது கட்சிக்கு ஜனநாயக ஆசாத் கட்சி (Democratic Azad Party) எனப் பெயரிட்டுள்ள அவர், மஞ்சள், வெள்ளை, நீலம் ஆகிய நிறங்களுடன் கூடிய கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தினார். மேலும் இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது, எனது புதிய கட்சிக்காக உருது, சமஸ்கிருதத்தில் இருந்து சுமார் 1,500 பெயர்கள் அனுப்பி இருந்தனர். ஹிந்தி, உருது கலவையான ஹிந்துஸ்தானி பெயரை வைக்க முடிவு செய்தோம். மேலும், கட்சி பெயர் ஜனநாயகமாகவும், அமைதியாகவும், சுதந்திரமாகவும் இருக்க வேண்டும்.

அதன்படி, எனது கட்சிக்கு ஜனநாயக ஆசாத் கட்சி எனப் பெயர் வைக்கப்பட்டு உள்ளது. கட்சி கொடியில் உள்ள மஞ்சள் நிறம், படைப்பாற்றல், வேற்றுமையில் ஒற்றுமையை குறிக்கிறது; வெள்ளை நிறம் அமைதியை குறிக்கிறது; நீலம், சுதந்திரம், வெளிப்படை, கற்பனை மற்றும் கடலின் ஆழத்திலிருந்து வானத்தின் உயரம் வரை வரம்புகளைக் குறிக்கிறது என கூறினார்.

Related Stories: