புழல் பகுதியில் ராதா கிரிதாரி கோயில் தேரோட்டம்

புழல்: புழல் பகுதியில் உள்ள ஸ்ரீராதா கிரிதாரி கோயிலில் நேற்றிரவு புரட்டாசி மாத தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான மக்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து பக்தி பரவசத்துடன் தரிசித்தனர். சென்னை புழல் பகுதியில் உள்ள  ராதா கிரிதாரி கோயில் மக்களிடையே புகழ்பெற்றது. இக்கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் ஜகன்நாதர், பலதேவர், சுபத்திரை ஆகியோருக்கு தேரோட்டம் நடைபெறும். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் தொற்று காரணமாக இக்கோயிலில் தேரோட்டம் நடைபெறவில்லை.

இந்நிலையில், இந்த ஆண்டு ஸ்ரீராதா கிரிதாரி கோயிலில் நேற்றிரவு புரட்டாசி மாத தேரோட்டம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் ஜகன்நாதர், பலதேவர், சுபத்திரை ஆகியோர் பவனி வந்தனர். செங்குன்றம் முதல் புழல் வரை நடைபெற்ற தேரோட்டத்தில் ஏராளமான மக்கள் ஆடிப்பாடி மகிழ்ந்து, தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

வழக்கமாக கோயிலின் வெளியே பவனி வரும்போது உற்சவமூர்த்தி வெளியில் அருள்பாலிப்பார். எனினும், இங்கு மூலவர்களான ஜகன்நாதர், பலதேவர், சுபத்திரை ஆகியோர் தேரோட்டமாக வெளியே வந்து மக்களுக்கு அருள்பாலிப்பது விசேஷம். இத்தேரோட்டத்தின்போது வழிநெடுகிலும் பெண்கள் கோலாட்டம் ஆடியும், நாம சங்கீர்த்தனம் இசைத்தும் ஆடிப்பாடி மகிழ்ந்தனர். இதில் பங்கேற்ற பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.

Related Stories: