ரஷ்யாவில் பள்ளி வளாகத்தில் மர்மநபர் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூட்டில் 7 குழந்தைகள் உட்பட 13 பேர் உயிரிழப்பு..!!

இசேவ்ஸ்க்: ரஷ்யாவில் முகமூடி உடன் பள்ளிக்குள் நுழைந்த மர்மநபர், துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 7 குழந்தைகள் உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர். துப்பாக்கிச்சூடு நடத்திய நபர், தன்னை தானே சுட்டுக்கொண்டு உயிரிழந்தார். மத்திய ரஷ்யாவில் உள்ள இசேவ்ஸ்க் என்ற நகரில் பள்ளிக்குள் நுழைந்த மர்மநபர், துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 7 பள்ளி சிறுவர்கள், 2 ஆசிரியர்கள், 2 பள்ளி காவலாளிகள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். ஆயிரம் மாணவர்கள் மற்றும் 80க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கொண்ட பள்ளி வளாகத்திற்குள் கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பல பள்ளி மாணவர்கள் உட்பட 20 பேர் படுகாயமடைந்ததாகவும் ரஷ்ய உள்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

துப்பாக்கிச்சூடு நடத்திய மர்மநபர், நாஜி படைகளின் குறியீடு கொண்ட மேற்சட்டை, முகமூடி அணிந்திருந்ததாகவும், அவரிடம் எந்த அடையாள அட்டையும் இல்லை என்றும் ரஷ்ய புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். ரஷ்ய ஊடகங்கள் வெளியிட்டிருக்கும் காணொலிகளில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட பள்ளி வளாகத்தில் அச்சத்துடன் கூச்சலும், குழப்பமும் நிறைந்த காட்சிகள் தெரியவருகின்றன. ரத்தம் உறைந்த வகுப்பறை தளம், துப்பாக்கிகுண்டு பாய்ந்த ஜன்னல் கண்ணாடிகள் கொண்ட காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளன.

திடீரென்று பள்ளிக்குள் மர்மநபர் ஒருவர் நுழைந்து சரமாரியாக துப்பாக்கியால் சுடுவதை கேட்டும், கண்முன்னே சக மாணவர்களும், ஆசிரியர்களும் துப்பாக்கிகுண்டுக்கு இரையாவதை கண்ட சிறுவர்கள், வகுப்பறை பெஞ்சுகளுக்கு அடியில் அச்சத்தில் உறைந்து ஒளிந்துகொள்ளும் பரிதாப காட்சிகளும் ரஷ்ய ஊடகங்களில் வெளியாகியுள்ளது. பள்ளி வளாகத்திற்குள் மர்மநபர் துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கான காரணம் இதுவரை தெரியாத நிலையில், அவர் யார்? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Related Stories: