பெங்களூருவில் விமானப்படை பயிற்சி வீரர் தற்கொலை விவகாரம்: 6 விமானப்படை அதிகாரிகள் மீது கொலை வழக்குப்பதிவு செய்தது கர்நாடகா போலீஸ்

பெங்களூரு: விமானப்படை பயிற்சி வீரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், பெங்களூர் விமானப்படை பயிற்சி கல்லூரியின் 6 விமானப்படை அதிகாரிகள் மீது, கர்நாடகா போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர். புதுடெல்லி உத்தம் நகரைச் சேர்ந்த அங்கிங் குமார் ஜா என்ற இளைஞர், விமானப்படைக்கு தேர்வானதை அடுத்து, பெங்களூரூ விமானப் படை பயிற்சி கல்லுாரியில், பயிற்சி வீரராக இருந்து வந்தார். அங்கிங் குமார் ஜா, பயிற்சியின்போது விதிமுறைகளை மீறியதாகக் கூறி, அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, கடந்த 21ம் தேதி பெங்களூரு விமானப்படை பயிற்சி கல்லூரியில் உள்ள விடுதி அறையில், அங்கிங் குமார் ஜா  துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அப்போது அவரது அறையில் இருந்து 7 பக்க கடிதம் கைப்பற்றப்பட்டது. அதில், உயர் அதிகாரிகள் 6 பேர், தன்னை வேண்டுமென்றே சித்திரவதை செய்து வந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், தனது மகன் நீக்கம் செய்யப்பட்ட பிறகு, அவனது செல்போன் அணைத்து வைக்கப்பட்டு இருந்ததாகவும், விமான பயிற்சி கல்லூரிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது அங்கிருந்தவர்கள் எந்த பதிலும் முறையாக தெரிவிக்கவில்லை என்றும் அவரது தந்தை குற்றம் சாட்டினார். இந்த சம்பவம் தொடர்பாக, அவர் அளித்த புகாரின்படி, 6 அதிகாரிகள் மீது கர்நாடக போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Related Stories: