டெல்டாவில் விடிய விடிய கனமழை; மின்னல் தாக்கி தந்தை, புதுமாப்பிள்ளை பலி: 3500 ஏக்கர் குறுவை பயிர் சாய்ந்தது

மன்னார்குடி: தென்மேற்கு பருவமழை வரும் 30ம் தேதியுடன் முடிவடையும் நிலையில் அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில்  மழை பெய்தது. டெல்டா மாவட்டங்களிலும் நேற்று நள்ளிரவு முதல் இன்று காலை வரை பலத்த மழை பெய்தது. திருவாரூர் மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு முதல் பலத்த மழை பெய்தது. திருவாரூர், மன்னார்குடி பகுதியில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. மன்னார்குடியில் மின்னல் தாக்கி தந்தை, மகன் பலியாகினர். அதன் விவரம் வருமாறு:

மன்னார்குடியை சேர்ந்தவர் விவசாயி அன்பரசன்(55). இவரது மகன் அருள் முருகன்(25). விவசாயியான இவருக்கு திருமணமாகி 20 நாட்களே ஆகிறது. இவரது மனைவி கார்த்திகா. மன்னார்குடி பகுதியில் நேற்று நள்ளிரவு பலத்த மழை பெய்தது. இதனால் வீடு அருகே நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ள வயலில் தேங்கியிருந்த தண்ணீரை அப்புறப்படுத்துவதற்காக அன்பரசன், அருள் முருகன் ஆகியோர் இன்று காலை சென்றனர். வயலில் தேங்கியுள்ள தண்ணீரை அகற்றும் பணியில் 2 பேரும் ஈடுபட்டனர்.

அப்போது மின்னல் தாக்கி அன்பரசன், அருள் முருகன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். நாகை மாவட்டத்தில் வேதாரண்யம், வேளாங்கண்ணி, கீழ்வேளூர், திட்டச்சேரி, திருமருகல் உள்ளிட்ட இடங்களில் இன்று பரவலாக மழை பெய்தது. மயிலாடுதுறை நகரில் இன்று அதிகாலை 4.30 மணி முதல் காலை 8 மணி வரை ேலசான மழை பெய்தது. மழையால் கீழ்வேளூர், பில்லுகுடி, சாத்தியக்குடி, படடமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் அறுவடைக்கு தயாரான 3000 ஏக்கர் குறுவை பயிர் சாய்ந்தன.

தஞ்சை மாநகரில் இன்று அதிகாலை முதல் பரவலாக பலத்த மழை பெய்தது. வல்லம் பகுதியில் பெய்த பலத்த மழையால் சம்பா சாகுபடி வயல்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. தஞ்சை அருகே 8ம் கரம்பை பகுதியில் சம்பா நேரடி நெல் விதைப்பு வயலில் நாற்றுகள் மூழ்கின. சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 500 ஏக்கர் குறுவை பயிர்கள் சாய்ந்ததன. கரூர் மாவட்டத்தில் இன்று அதிகாலை முதலும், புதுக்கோட்டை நகரில் இன்று அதிகாலை 3 மணி முதல் காலை 7 மணி வரை சாரல் மழை பெய்தது.

Related Stories: