சாகுபடி செய்யும் பரப்பளவுக்கு ஏற்ப விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கி கடன்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மேட்டூர் அணையில் இந்த ஆண்டு வழக்கமாக திறக்கப்படும் தேதிக்கு முன்னரே குறுவை பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் வழக்கத்தை விட அதிகமான ஏக்கரில் சாகுபடி பணிகளை விவசாயிகள் மேற்கொண்டுள்ளனர். டெல்டா மாவட்டங்களில் குறுவை மற்றும் சம்பா பருவ நெல் சாகுபடி முக்கியமானது. இம்முறை மேட்டூரில் நீர்மட்டம் குறையாமல், தொடர்ந்து 93.4 டி.எம்.சி நீர் இருப்பில் உள்ளது.

 

அதனால் குறுவை சாகுபடியை தொடர்ந்து, தற்பொழுது சம்பா பருவ சாகுபடி நடவு செய்யும் ஆயத்தப்பணியில் விவசாயிகள் ஈடுப்பட்டுள்ளனர். எனவே, தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள், விவசாயிகள் எத்தனை ஏக்கரில் விவசாயம் செய்கிறார்களோ, அத்தனை ஏக்கருக்கும் கடன் கொடுக்க வேண்டும். மேலும் விவசாய நிலங்கள் அதிகரிப்பிற்கு ஏற்ப அரசு, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை தேவையான அளவு, விவசாயிகளுக்கு சிரமம் இல்லாமல் அனைத்து இடங்களிலும் திறக்க வேண்டும்.

 

தற்பொழுது மழைக் காலமாக இருப்பதால், நெல் ஈரப்பதம் அளவை 17 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக உயர்த்த வேண்டும். அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் சிமெண்ட் களம் அமைத்து விவசாயிகள் கொண்டு வரும் நெல்களை பாதுகாக்கவும், மேலும் மழை நேரங்களில் நெல் மூட்டைகள் நனையாமல் இருப்பதற்கு தேவையான தார்பாய்களை வழங்க வேண்டும். இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு துரிதமாக எடுக்க வேண்டும்.

Related Stories: