தமிழக கவர்னர் 2 நாள் பயணமாக இன்று டெல்லி செல்கிறார்: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் நாளை சந்திப்பு

சென்னை: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இரண்டு நாள் பயணமாக இன்று மாலை டெல்லி செல்கிறார். ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நாளை சந்தித்து பேசுகிறார். தமிழகத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்தில் என்.ஐ.ஏ. நடத்திய சோதனையை தொடர்ந்து 10 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் கோவை, சேலம், ஈரோடு, கன்னியாகுமரி உள்பட சில இடங்களில் பாஜக, இந்து முன்னணி அலுவலகங்கள் மற்றும் வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இதனால் தமிழகம் முழுவதும் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படுபவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் என்று டி.ஜி.பி.சைலேந்திரபாபு எச்சரித்துள்ளார். அடுத்தடுத்து வீசப்பட்ட வெடிகுண்டு சம்பவங்கள் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று மாலை சென்னையிலிருந்து டெல்லி புறப்பட்டு செல்கிறார். இரண்டு நாள் பயணமாக டெல்லி செல்லும் அவர், நாளை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் உள்துறை அமைச்சக அதிகாரிகளை சந்தித்து இந்த சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்துவார் என்று கூறப்படுகிறது. ஏற்கெனவே ஒன்றிய உள்துறை அமைச்சகம் இந்த சம்பவம் குறித்து தமிழக அரசிடம் விளக்கம் கேட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் இந்த சம்பவங்கள் குறித்து கவர்னர் பேசுவார் என்றும் மேற்கொண்டு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்துவார் என்றும் எதிர்பார்கப்படுகிறது. மேலும் கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லியில் இரண்டு நாட்கள் தங்கியிருந்து சென்னை திரும்புவார் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.தமிழ்நாட்டில் தொடரும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களாலும் அக்டோபர் 2ம் தேதி நடைபெறும் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பாலும் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில் கவர்னரின் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Related Stories: