பாதுகாப்பு பணிக்கு கோவை வந்தபோது கன்டெய்னர் லாரி மீது போலீஸ் வாகனம் மோதியது: 31 போலீசார் படுகாயம்

அவிநாசி: கோவையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடத்தப்பட்ட என்.ஐ.ஏ. சோதனையை தொடர்ந்து கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் சில பகுதிகளில் ஆங்காங்கே பெட்ரோல் மற்றும் டீசல் குண்டுகள் வீசப்பட்டதால் பரபரப்பு மற்றும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து துணை ராணுவ படையினரும், தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கூடுதல் பாதுகாப்பு பணிக்காக போலீசாரும் கோவை வந்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் கடலூர் மாவட்ட ஆயுதப்படையில் இருந்து 31 போலீசார் நேற்றிரவு 8.30 மணி அளவில் ஒரு வாகனத்தில் புறப்பட்டு கோவை வந்து கொண்டிருந்தனர். பஸ்சை, டிரைவர் முருகன் ஓட்டி வந்தார். இன்று அதிகாலை 4 மணி அளவில் போலீசார் வந்த பஸ், அவிநாசி அடுத்த பழங்கரை ஊராட்சி பிரிவில் வந்தபோது முன்னால் சென்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரி, திடீரென இடது பக்கம் திரும்பியது. அப்போது போலீசார் வந்த பஸ், பயங்கர வேகத்தில் கன்டெய்னர் லாரி மீது மோதியது.

இதில், பஸ் டிரைவர் முருகன் மற்றும் பஸ்சில் இருந்த 31 போலீசார் படுகாயம் அடைந்தனர். இவர்களில் 16 பேர் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கும், 15 பேர் கோவை அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து நடந்ததும் கன்டெய்னர் லாரியில் இருந்து அதன் டிரைவர் கீழே குதித்து தப்பி ஓடிவிட்டார்.

Related Stories: