கர்நாடகாவில் இருந்து சித்தூருக்கு காரில் கடத்திய 4 ஆயிரம் கர்நாடகா மது பாட்டில்கள் பறிமுதல்-வாலிபர் கைது, 4 பேர் தப்பியோட்டம்

சித்தூர் : சித்தூருக்கு காரில் கடத்திய 4 ஆயிரம் கர்நாடகா மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து வாலிபரை கைது செய்தனர்.

சித்தூர் தாலுகா காவல் நிலையத்தில் டிஎஸ்பி சுதாகர் ரெட்டி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: சித்தூர் தாலுகா காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மத்தையாச்சாரி, மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராமகிருஷ்ணா, பிரதாப் ரெட்டி மற்றும் போலீசார் சித்தூர் திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் செர்ல்லோ பள்ளி கிராமம் அருகே நேற்று காலை 6 மணி அளவில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது  பெங்களூருவில் இருந்து சித்தூர் நோக்கி வந்த காரை போலீசார் தடுத்து நிறுத்தினர். ஆனால் போலீசாரை பார்த்தவுடன் அந்த கார் நிற்காமல் சென்றது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் காரை பின் தொடர்ந்து மடக்கிப் பிடிக்க முயற்சி செய்தனர். அப்போது மர்ம நபர்கள் காரை சாலையோரம் நிறுத்திவிட்டு அதில் இருந்த ஐந்து பேர் தப்பி ஓடினர். அதில் ஒருவரை மட்டும் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் காரை சோதனை செய்ததில், 4,000 கர்நாடகா மது பாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. இதைடுத்து மதுபாட்டில்களை காருடன் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்டவரிடம் நடத்திய விசாரணையில், அவர் சித்தூர் வீரபத்ர காலனி பகுதியைச் சேர்ந்த அன்சர்(26) என தெரியவந்தது. மேலும் தப்பி ஓடியவர்கள் சித்தூரை சேர்ந்த கணேஷ், ராமு, யாதமரியை சேர்ந்த ஹரிஷ், தாஹிர் ஆகியோர் என தெரியவந்தது.

மேலும் விசாரணையில், இவர்கள் கர்நாடகா மாநில எல்லையான நங்கிலி பகுதியில் உள்ள ஒயின்ஸ் ஷாப்பில் குறைந்த விலைக்கு மது பாட்டில்கள் வாங்கி வந்து சித்தூர் மாநகரத்தில் பல்வேறு பகுதிகளில் அதிக விலைக்கு விற்பனை செய்வது தெரியவந்தது.

மேலும் கர்நாடகா மாநில எல்லையில் உள்ள ஒயின்ஷாப் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மிக விரைவில் தப்பி ஓடிய நான்கு பேரையும் மற்றும் பாலாஜி ஒயின் ஷாப் உரிமையாளரையும் மிக விரைவில் கைது செய்வோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: