சிவகிரி அருகே காட்டு யானை கூட்டம் புகுந்து கரும்பு தோட்டங்கள் நாசம்-விவசாயிகள் வேதனை

சிவகிரி : மேற்கு தொடர்ச்சிமலைப்பகுதியில் இருந்து சமீபகாலமாக யானை, சிறுத்தை, கரடி, காட்டு பன்றிகள் போன்ற வனவிலங்குகள் வெளியேறி வருவது அதிகரித்து வருகிறது. இவ்வாறு வரும் வனவிலங்கள் மலைப்பகுதி ஓட்டியுள்ள விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவது அதிகரித்து வருகிறது. இதனால், விவசாயிகளுக்கு லட்சக்கணக்கில் இழப்பு ஏற்படுவதால் மனவேதனையில் உள்ளனர். இந்நிலையில் தென்காசி மாவட்டம் சிவகிரிக்கு மேற்கு ஐந்து கிலோமீட்டர் தொலைவில் பெரிய ஆவுடைய பேரி குளத்திற்கு மேற்கே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரப் பகுதியில் சிவகிரி பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் கரும்பு, நெல், தென்னை, மா போன்றவைகளை பயிர் செய்துள்ளனர்.

கடந்த இரண்டு நாட்களாக யானைகள் கூட்டம் கூட்டமாக வந்து இப்பகுதியிலுள்ள கரும்பு தோப்பிற்குள் புகுந்து  நாசம் செய்து வருகிறது. இப்பகுதியில் கரும்பு விவசாயம் செய்துள்ள உலகநாதன், கருப்பையா, மைனர் மாரிமுத்து, தேவ ஆசீர்வாதம், சுப்பிரமணியன், முத்தையா ஆகியோரின் கரும்புத் தோட்டங்களுக்குள் காட்டு யானைகள் புகுந்து சேதம் ஏற்படுத்தியுள்ளன. அறுவடைக்கு தயாராக இருந்த கரும்புகள் காட்டு யானைகளால் நாசம் செய்யப்பட்டுள்ளதால் விவசாயிகள் மிகவும் சோகத்தில் உள்ளனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள், வருவாய்த் துறையினருக்கும் வனத்துறை அதிகாரிகளுக்கும் சேதம் குறித்து விவரங்களை தெரிவித்தனர். இந்த பாதிப்பு தொடர்பாக விவசாயிகள் விளைநிலங்களை நேரில் பார்வையிட்டு போதிய இழப்பீடு வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் யானைகள் அழிவை ஏற்படுத்தி வருவது தொடர்வதால் மலைப்பகுதியை ஒட்டியுள்ள வயலுக்குள் யானைகள் புகாதவாறு அகழிகள், மின் வேலி அமைத்து தர வேண்டும் என்றும் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: