பண்ருட்டி அருகே பழங்கால சுடுமண் பொம்மை கண்டெடுப்பு

பண்ருட்டி : பண்ருட்டி அருகே உள்ள தென்பெண்ணையாற்றில், வேலைபாடுகளுடன் கூடிய சுடுமண் பொம்மை கண்டெடுக்கப்பட்டது.பண்ருட்டி அருகே உள்ள உளுந்தாம்பட்டு தென்பெண்ணையாற்றில் தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல் மேற்புறகளஆய்வு மேற்கொண்டார். அப்போது பழங்கால மக்கள் பயன்படுத்திய சுடுமண்ணாலான பொம்மையை கண்டெடுத்தார்.

இதை தொடர்ந்து அவர் கூறுகையில், கடந்த சில மாதங்களாக பண்ருட்டி பகுதி தென்பெண்ணையாற்றின் கரையோரத்தில் மேற்புற களஆய்வு மேற்கொண்டபோது பழங்கால மக்களின் தொல்லியல் தடயங்கள் கண்டறியப்பட்டன. அதை தொடர்ந்து உளுந்தாம்பட்டு பகுதியில் மேற்புற ஆய்வு செய்தபோது சுடுமண்ணாலான பொம்மை, நுணுக்கமான கலைத்தன்மை மற்றும் வேலைபாடுகளுடன் கண்டெடுக்கப்பட்டது.

இங்கு கண்டெடுக்கப்பட்ட சுடுமண் பொம்மை ஒரு குழந்தை உருவம், குழந்தை முட்டி போட்டு தவழுவது போல் காணப்படுகிறது. தலையில் அலங்காரமும், காது மற்றும் கழுத்து பகுதியில் கலைநயமிக்க அணிகலன்களும், ஊன்றி உள்ள இரண்டு கைகளிலும் வளையல் போன்ற அணிகலனும், பொம்மையின் இடுப்பு பகுதியிலும் அணிகலன் காட்டப்பட்டுள்ளது.

பழங்காலத்தில் பண்டைய கால மக்களின் கலை ஆர்வத்தை அறிந்து கொள்ளும் வகையில் இச்சுடுமண் பொம்மை காணப்படுகிறது. இதன் மூலம் இந்த பகுதியில் வாழ்ந்த மனிதர்கள் கலைநயம் மிக்கவர்களாக இருந்துள்ளார்கள் என்பதை அறிய முடிகிறது. இந்த சுடுமண் பொம்மை  சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலத்திற்கு உட்பட்ட பொம்மையாக இருக்கலாம், என்றார்.

Related Stories: