பழங்குடியின மாணவர்களுக்கு கல்வி வெளிச்சம் தந்த நல்லாசிரியர்

கல்வியில் பின் தங்கிய மலைவாழ் பழங்குடியின மக்களின் மத்தியில் கல்வி வெளிச்சம் தந்து இன்று நல்லாசிரியர் விருது பெற்று நல்லாசிரியராய் திகழ்பவர் தமிழ்செல்வன்.

மண்டைக்காடு பகுதியை பூர்வீகமாக கொண்டவர் தமிழ்செல்வன். படித்தது, வளர்ந்தது எல்லாம் குலசேகரம் அருகேயுள்ள கிராம பகுதியான கொட்டூர். தற்போது நாகர்கோவில், தம்பத்துகோணத்தில் வசித்து வருகிறார். தந்தை குலசேகரம் அரசு மருத்துவமனையில் ஊழியராக பணியாற்றியவர்.

தாயார் பாஞ்சாலி, குலசேகரம் அருகேயுள்ள குறக்குடி அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி ஒய்வு பெற்றுள்ளார். பெற்றோரின் வற்புறுத்தலால் ஆசிரியர் பயிற்சி முடித்த இவருக்கு அரசு ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் வேலைவாய்ப்பு அமைந்தது. 1989 முதல் தென்னாற்காடு, விழுப்புரம் போன்ற மாவட்டங்களில் பணி வாய்ப்பு அமைந்தது. 1997ம் ஆண்டு குமரி மாவட்டத்திற்கு பணி மாறுதல் பெற்று பத்துக்காணி அரசு உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளியில் பணியில் சேர்ந்தார். அதன் பின்னர் பல்வேறு இடங்களில் பணியாற்றிய இவர் கடந்த 2014ம் ஆண்டு முதல் மணலோடையிலுள்ள அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றார்.

அந்த நேரத்தில் இங்கு 29 மாணவர்கள் மட்டும் இருந்துள்ளனர். பழங்குடியினர் மத்தியில் கல்வி விழிப்புணர்வு இல்லாததை கண்டு அதற்கு மாற்று திட்டங்களை வகுத்தார். மணலோடை பகுதியை சுற்றியுள்ள மலைகிராமங்களுக்கு நடந்து சென்று கிராமங்களில் உள்ள முக்கிய நபர்களை சந்தித்தார். அதன் பின்னர் 15 வயதுக்குட்பட்டு கல்வி நிலையம் செல்லாதவர்கள் குறித்து கணக்கெடுப்பு செய்தார். அதன் பின்னர் பள்ளி செல்லாத பிள்ளைகளின் வீடுகளுக்கு சென்று அவர்களின் எதிர்காலம் குறித்து விளக்கி கல்வி விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.

கல்வி உரிமை சட்டத்தின்படி அவர்களின் வயதுக்கேற்ப வகுப்புகளில் சேர்த்து சிறப்பு பயிற்சிகள் வழங்கி இன்று உயர் படிப்புக்கு செல்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளார். பள்ளிக்கு வந்துவிட்டு இடையில் நின்றவர்களை தேடி கண்டுபிடித்து மீண்டும் பள்ளிக்கு கொண்டு வந்து அவர்களுக்கு எழுத்தறிவிப்பது. மறக்க முடியாத நிகழ்வாக உள்ளது. மாணவர்களுக்கு சமைக்கும் உணவை அவர்களுடன் சேர்ந்து ஒன்றாக அமர்ந்து உண்டு நட்பு, உறவு முறையில் பழகுவது மாணவர்களை கவர்ந்துள்ளது. மாணவர்களுக்கு பள்ளிக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் அதிகரித்துள்ளது. மாணவர்கள் வீட்டு சூழலை ஆசிரியர்களுடன் பகிர்ந்து கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.

இங்கு மாணவர்கள் மட்டும் இருந்தால் போதாது, அடிப்படை வசதிகள் பள்ளிக்கு வேண்டும் என்பதை உணர்ந்து அரசு மற்றும் தனியார் உதவியுடன் பள்ளிக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இதனால் வனப்பகுதியில் இயற்கை சூழலில் நகர்ப்புற பள்ளி போன்ற தோற்றத்தில் இப்பள்ளி உள்ளது. சோலார் பேனல் மூலம் தடையில்லா மின்சாரம், இணைய வசதி, தங்கும் விடுதி, உணவு என அனைத்து வசதிகளும் செய்ததன் பலனாக மாணவர்கள் எண்ணிக்கை 130ஐ கடந்துள்ளது.

தற்போது உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. கொரொனா பாதிப்புகளால் கல்வி முடங்கியதால் மாணவர்களின் வசிப்பிடங்களுக்கு நேரடியாக சென்று நடமாடும் கல்வி திட்டம் மூலம் கல்வியளிக்கப்பட்டது. இத்தகைய கல்வி பணிகளால் கல்வியில் பின்தங்கிய நிலையில் இருந்த இந்த பகுதிகளில் பிறக்கும் அனைத்து குழந்தைகளும் கல்வி வயதை எட்டியதும் பள்ளிக்கு செல்லும் நிலை உருவாகியுள்ளது. இதற்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்து கல்வி பணியாற்றிய ஆசிரியர் தமிழ் செல்வனுக்கு தமிழ்நாடு அரசு நல்லாசிரியர் விருது வழங்கி கவுரவித்துள்ளது. இதனை பள்ளி மாணவர்களுடன் மலைவாழ் பழங்குடியின மக்களும் கொண்டாடுகின்றனர்.

Related Stories: