சத்திரக்குடி வட்டாரத்தில் விதை நேர்த்தி செயல்விளக்க முகாம்

பரமக்குடி : சத்திரக்குடி வட்டாரத்தில் கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் 2022-23ல் தேர்வு செய்த முத்துவயல் கிராம பஞ்சாயத்தின் உட்கடை கிராமத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மூலம், நெல் பொட்டாஷ் விதை கடினப்படுத்துதல் செயல்விளக்கம் செய்து காட்டப்பட்டது. ஒரு ஏக்கருக்கு தேவையான நெல், 300 கிராம் பொட்டாஷ் உரத்தினை 30 லிட்டர் தண்ணீரில் கலந்து அதில் 30 கிலோ விதையினை நன்கு கலக்கி 13-14 மணி நேரம் ஊற வைத்து, பின் நீரினை வடித்து 24 மணி நேரம் நிழலில் காய வைத்து பின் விதைக்க வேண்டும்.

பொட்டாஷ் நேர்த்தி செய்த விதைகளை உடனே விதைக்க இயலாத சூழ்நிலையில், ஒரு மாத காலம் வரை வைத்திருந்து விதைக்கலாம். இவ்விதையினை விதைப்பதால் பயிர் முளைத்து ஒரு மாத காலம் வரை மழையில்லாவிட்டாலும் பயிரினை வறட்சியிலிருந்து பாதுகாக்கலாம் என சத்திரக்குடி வேளாண்மை உதவி இயக்குநர் ராஜேந்திரன் விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார்.

அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் சுகன்யா உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா விதை நேர்த்தி செய்து இடுவதன் அவசியம் குறித்து எடுத்துக்கூறினார்.

உதவி வேளாண்மை அலுவலர் கண்ணன் விவசாயிகளிடம், நெல் நுண்ணூட்டச் சத்து இடுவதன் அவசியம் மற்றும் வேளாண்மை விரிவாக்கம் மையத்தில் இருப்பு விவரம் பற்றி கூறினார்.

அட்மா திட்ட உதவி மேலாளர் சந்திரகுரு விவசாயிகளுக்கு விதை நேர்த்தி முறைகள் குறித்து செயல் விளக்கம் செய்து காண்பித்தார்.

Related Stories: