உயர்கல்வி முடிக்கும் வரை மாதம் ₹1000 கிடைக்கும் ‘புதுமைப்பெண்’ திட்டத்தில் 1933 பேர் சேர்ந்தனர்-மாணவியரே இணையதளத்தில் விபரங்களை பதிவு செய்யலாம்

நாகர்கோவில் :  குமரி மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டத்தில் பயன்பெறுவோர் எண்ணிக்கை 1933 ஆக உயர்ந்துள்ளது. தகுதியுள்ள மாணவியர் தாங்களாகவே இணையதளத்தில் விபரங்களை பதிவேற்றம் செய்து பயன்பெறலாம். தமிழ்நாடு அரசு பெண் கல்வியை போற்றும் விதமாகவும், உயர்கல்வியை உறுதி செய்து இன்றைய பெண் சமூகம் நாளைய தமிழகத்தை தாங்கும் அறிவியல் வல்லுநர்களாகவும், மருத்துவர்களாகவும், பொறியாளர்களாகவும், படைப்பியலாளராகவும், நல்ல குடிமக்களை பேணும் உயர்கல்வி கற்ற பெண்களாகவும், கல்வியறிவு தொழில்நுட்பம் நிறைந்த உழைக்கும் சமூகத்தை சார்ந்தவர்களாகவும், உருவாக அடித்தளமாக ‘புதுமைப் பெண்’ என்னும் திட்டத்தை உருவாக்கியதோடு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதற்கட்டமாக 67 ஆயிரம் கல்லூரி மாணவிகள் பயன்பெறும் வகையில் சென்னையில் 2500 மாணவிகளுக்கு வேலைவாய்ப்பு வழிகாட்டி புத்தகம் மற்றும் நிதிக்கல்வி புத்தகம்

அடங்கிய ‘புதுமைப்பெண்’ பெட்டகப்பை மற்றும் பற்று அட்டை ஆகியவற்றை வழங்கி தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் கூறியதாவது:தமிழ்நாடு அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ் ‘புதுமைப் பெண்’ திட்டத்தினை கடந்த 05.09.2022 அன்று சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்தார். குமரி மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் இதுவரை 1933 கல்லூரி மாணவியர்களுக்கு மாதம் ₹1,000 அவர்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கையினை அதிகரிக்கும் பொருட்டு, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும், சான்றிதழ் படிப்பு, பட்டயப்படிப்பு, பட்டப்படிப்பு, தொழிற்கல்வி ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி கல்வி பயின்று முடிக்கும் வரை மாதம் ₹1,000 அவர்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படும். இந்த மாணவிகள் ஏற்கனவே பிற கல்வி உதவித் தொகை பெற்று வந்தாலும் இத்திட்டத்தில் கூடுதலாக உதவி பெறலாம்.

மேலும், மாணவிகள் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் படித்து தமிழ்நாட்டில் உயர்கல்வி பயில்பவராக இருத்தல் வேண்டும். தனியார்ப் பள்ளியில் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பயின்ற பின் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்த மாணவியர் இத்திட்டத்தின் கீழ் பயனடையலாம். அரசுப் பள்ளிகள் என்பது பஞ்சாயத்து யூனியன் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள், ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள், நகராட்சிப் பள்ளிகள், மாநகராட்சிப் பள்ளிகள், பழங்குடியினர் நலப் பள்ளிகள், கள்ளர் சீர்மரபினப் பள்ளிகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலப் பள்ளிகள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை பள்ளிகள், வனத்துறை பள்ளிகள், சமூகப் பாதுகாப்புத் துறை பள்ளிகள் போன்றவற்றில் பயிலும் மாணவிகளும் இத்திட்டத்தின் கீழ் பயனடையலாம்.

மாணவிகள் 8ம் வகுப்பு அல்லது 10ம் வகுப்பு அல்லது 12ம் வகுப்புகளில் படித்து பின்னர் முதன்முறையாக உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் படிப்புக்கு மட்டுமே இத்திட்டம் பொருந்தும். அவை சான்றிதழ், பட்டயம், இளங்கலைப் பட்டங்கள், தொழில் சார்ந்த பட்ட படிப்புகள் ஆகும். தொலைதூரக் கல்வி மற்றும் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவிகளுக்கு இத்திட்டம் பொருந்தாது.

2022-2023ம் கல்வியாண்டில், மாணவியர்கள் புதிதாக மேற்படிப்பில் முதலாம் ஆண்டு சேர்ந்த பின்னர், இணையதளம் வழியாக இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். மேலும், இதர முதலாம் ஆண்டிலிருந்து இரண்டாம் ஆண்டு செல்லும் மாணவியரும், இரண்டாம் ஆண்டிலிருந்து மூன்றாம் ஆண்டு செல்லும் இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மாணவியர்களும், தொழிற்கல்வியைப் பொறுத்தமட்டில் மூன்றாம் ஆண்டிலிருந்து நான்காம் ஆண்டிற்கு செல்லும் மாணவிகளுக்கும், மருத்துவக் கல்வியைப் பொருத்தமட்டில் நான்காம் ஆண்டிலிருந்து ஐந்தாம் ஆண்டு செல்லும் மாணவியர்களும் இத்திட்டத்தின் கீழ் பயனடையலாம். 2021-2022ஆம் ஆண்டில், இறுதியாண்டு பயிலும் மாணவிகள் இத்திட்டத்தின் கீழ் பயனடைய இயலாது.

ஏனெனில் ஒரு சில மாதங்களில் இம்மாணவியர்கள் தங்களது இளநிலைப் படிப்பினை நிறைவு செய்துவிடுவர். இத்திட்டத்தின் கீழ் இளநிலை படிப்பு பயிலும் மாணவிகள் மட்டுமே பயனடைய இயலும். முதுநிலை படிப்பு பயிலும் மாணவியர்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற இயலாது. இத்திட்டத்தில் பயன்பெறுவது குறித்து தங்களுக்குத் தேவையான தெளிவுரைகள், கூடுதல் விவரங்களை கட்டணமில்லா தொலைப்பேசி எண் 14417 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு விபரங்களைப் பெறலாம்.

இளநிலை கல்வி பெறும் அனைத்து மாணவியரும் (இளநிலை முதலாம் ஆண்டு சேரும் மாணவியர்களும், இளங்கலை, தொழிற்கல்வி, மருத்துவக் கல்வியில் 2ஆம் ஆண்டு முதல் 5ஆம் ஆண்டு வரை பயிலும் மாணவிகளும்) இத்திட்டத்திற்காகப் புதியதாக உருவாக்கப்பட்டுள்ள இணையதளம் https://penkalvi.tn.gov.in வழியாக தங்கள் விண்ணப்பங்களை ஆதார் நகல், வங்கி கணக்கு புத்தக நகல், 6 முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்ததற்கான சான்று மற்றும் பள்ளி மாற்றுச் சான்றிதழ் போன்ற ஆவண நகல்களைக் கொண்டு மாணவியர் தாங்களாகவே தங்களது கைப்பேசி அல்லது கணினி வாயிலாகவும், இணையதளம் முகவரியை பயன்படுத்தி பதிவேற்றம் செய்து கொள்ளலாம். இதனை சம்பந்தப்பட்ட கல்லூரி முதல்வர்கள் உறுதி செய்து கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: