திருவாடானை வட்டாரத்தில் துவக்கம் 70,000 ஏக்கரில் சம்பா பட்டம் நெல் விதைப்பு பணி-ஓரளவு மழை பெய்தாலும் விளைச்சலுக்கு வந்துவிடும்

திருவாடானை : திருவாடானை வட்டாரத்தில் 70 ஆயிரம் ஏக்கரில் சம்பா பட்டம் நெல் விதைப்பு பணி நடைபெற்று வருகிறது.திருவாடானை தாலுகா மாவட்டத்தின் நெற்களஞ்சியம் என அழைக்கப்படுகிறது. மாவட்டத்திலேயே அதிக பரப்பளவில் நெல் விவசாயம் செய்யப்படுகிறது. திருவாடானை ஒன்றியத்தில் மட்டும் 70 ஆயிரம் ஏக்கரில் சம்பா பட்டத்தில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இங்கு பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட பெரிய கண்மாய்கள் உள்ளன. ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் பராமரிப்பில் 500க்கும் மேற்பட்ட சிறு பாசன கண்மாய்களும் 500க்கும் மேற்பட்ட ஊரணிகளும் உள்ளன. முற்றிலும் பருவ மழையை நம்பியே விவசாயம் நடைபெற்று வருகிறது.

பருவகாலத்தில் பெய்யும் மழை தண்ணீரை இங்குள்ள நீர்நிலைகளில் தேக்கி வைத்து விவசாயத்திற்கு பயன்படுத்தி அதிக நெல்லை மக்கள் உற்பத்தி செய்து விடுகின்றனர். வானம் பார்த்த பூமி என்றாலும் பெய்யக்கூடிய சிறிய மழையை கொண்டு நிலங்களை தயார் செய்து வறண்ட நிலத்திலேயே நேரடியாக நெல் விதைப்பு செய்து விடுகின்றனர்.விதைக்கப்பட்ட நெல் ஒரு மாதம் வரை கெடாமல் அப்படியே நிலத்தில் கிடக்கும். எப்போது மழை பெய்கிறதோ அப்போது நெல்மணிகள் பயிராக முளைத்து விடும். 20 ஆண்டுகளுக்கு முன்பு தண்ணீரை பயன்படுத்தி நாற்று பாவி வயலில் தண்ணீர் பாய்ச்சி உழவு செய்து பின்னர் நாற்று நடுவார்கள். இதற்கு அதிக அளவில் தண்ணீர் தேவைப்பட்டது.

பல சமயங்களில் பருவமழை போதிய அளவு பெய்யாமல் காலம் கடந்து பெய்வது அல்லது ஏமாற்றி விடுவது போன்ற நிகழ்வுகள் அடிக்கடி நடந்து விவசாயிகள் நஷ்டப்பட்டு வந்தனர்.இதனால் கோடை உழவு செய்து வறண்ட நிலத்தில் நெல்லை விதைத்து எப்போது மழை பெய்கிறதோ அப்போது பயிர் முளைத்து வரும் நேரடி நெல் விதைப்பு என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விவசாயிகள் விதைப்பு செய்ய துவங்கி விட்டனர். இதனால் சிறிய அளவில் மழை பெய்தாலும் பயிர் முளைத்து விடும். ஓரளவு மழை பெய்தாலும் வறட்சியில் சிக்கி விடாமல் நெல் விளைச்சலுக்கு வந்துவிடும்.

இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இப்பகுதி மக்கள் நேரடி நெல் விதைப்பு கடந்த 20 ஆண்டுகளாக செய்து வருகின்றனர். இந்த ஆண்டு பெய்த சிறிய அளவிலான கோடை மழையை வைத்து நேரடி நெல் விதைப்பை 70 ஆயிரம் ஏக்கரில் மேற்கொண்டு வருகின்றனர்.

விவசாயிகள் கூறுகையில், காலத்திற்கு ஏற்றார்போல் விவசாயத்தில் நுட்பங்களை பயன்படுத்தினால் மட்டுமே நஷ்டத்தில் இருந்து விடுபட முடியும். முன்பெல்லாம் நாற்றுப் பாவி நடவு செய்யும்போது அதிக செலவும் தண்ணீர் தேவையும் இருந்து வந்தது. ஆனால் இந்த நேரடி நெல் விதைப்பு செய்த பின் ஓரளவு செலவு குறைவாகவும் மகசூல் அதிகமாகவும் கிடைக்கிறது. மேலும் குறைந்த அளவு மழை பெய்யும் காலத்தில் குறைந்த தண்ணீர் தேவையில் முழு விளைச்சல் கிடைத்து விடுகிறது என்றனர்.

அனைவரும் காப்பீடு செய்ய நடவடிக்கை

இதுகுறித்து விவசாயிகள் சங்க நிர்வாகி முத்துராமு கூறுகையில், ‘‘இப்பகுதி ஒரு போகம் மட்டுமே நெல் விவசாயம் செய்யப்படுகிறது. அதிக நெல் உற்பத்தி செய்யப்படும் பகுதியாக உள்ளது. விவசாயிகள் வறட்சியின் பிடியில் சிக்கி பாதிக்கப்படாமல் இருப்பது பயிர் காப்பீடு திட்டத்தால் தான். எனவே இந்த திட்டத்தை முறையாக அனைத்து விவசாயிகளையும் காப்பீடு செய்ய வைத்து முறையாக கணக்கெடுத்து, பாதிக்கப்படும் சமயத்தில் உரிய காலத்தில் இழப்பீடு வழங்க மத்திய, மாநில அரசுகள் தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

கூட்டுறவு சங்கங்கள் மூலம் அனைத்து பகுதிகளுக்கும் தட்டுப்பாடு இன்றி உரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து தொடக்க வேளாண்மை கடன் சங்கங்கள் மூலம் உரிய நேரத்தில் பயிர்க்கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பணிகளை முறையாக மாவட்ட நிர்வாகம் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

தரிசுகளை விளைநிலமாக்கிய கலைஞர் வேளாண் திட்டம்

திருவாடானை ஒன்றியத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் நெய்வயல், தளிர் மருங்கூர், முள்ளி முனை, புதுப்பட்டினம், நம்புதாளை, எஸ்பி பட்டினம், நகரிகாத்தான், தேளூர், வெள்ளையபுரம், கூகுடி, பதனக்குடி ஆகிய 11 ஊராட்சிகளில் வேளாண்மை துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் பல ஆண்டுகளாக தரிசு நிலமாக இருந்த நிலங்களை சுத்தப்படுத்தி விளைநிலங்களாக மாற்றிட மானியமாக தொகை வழங்கப்பட்டு சாகுபடி நிலமாக மாற்றப்பட்டுள்ளது.

தளிர் மருங்கூர் மற்றும் நெய்வயல் ஆகிய ஊராட்சிகளில் போர்வெல் அமைக்கப்பட்டு விவசாயத்திற்கு பயன்படுத்தும் வகையில் பணி நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தின் மூலம் 275 விவசாயிகளுக்கு வேளாண் கருவிகள் வழங்கப்பட்டுள்ளது. 300 தென்னங்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. தமிழக அரசின் பல்வேறு மானியத் திட்டங்களின் கீழ் இப்பகுதியில் விவசாய பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

Related Stories: