தமிழக-ஆந்திர எல்லையில் சோதனை 6 டன் ரேஷன் அரிசி மினிலாரியுடன் பறிமுதல்-உணவுக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி

வேலூர் : தமிழக- ஆந்திர எல்லை சோதனைச்சாவடியில் 6 டன் ரேஷன் அரிசியுடன் லாரியை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஒருவரை கைது செய்தனர்.வேலூர் மாவட்டத்தில் இருந்து ஆந்திரா, கர்நாடகா மாநிலத்திற்கு ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வருகிறது. இதை வருவாய்த்துறையினர், பறக்கும்படையினர், உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அடிக்கடி ரெய்டு நடத்தி ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து வருகின்றனர். மேலும் இதுதொடர்பாக குற்றவாளிகளை கைது செய்தும் வருகின்றனர். இருப்பினும் தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தல் சம்பவம் அரங்கேறி வருகிறது.

இந்நிலையில் லத்தேரி-பரதராமி வழியாக ரேஷன் அரிசி கடத்துவதாக வேலூர் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று அதிகாலை 4 மணியளவில் தமிழக -ஆந்திரா எல்லையான கொட்டளம் வனத்துறை சோதனைச்சாவடியில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு டிஎஸ்பி நந்தகுமார் தலைமையில் எஸ்ஐ தென்னரசு, எஸ்எஸ்ஐ வெங்கடேசன் மற்றும் போலீசார் அதிரடியாக வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அவ்வழியாக வந்த மினி லாரியை போலீசார் மடக்கி சோதனை செய்தனர். அப்போது அதில் ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது. இது தொடர்பாக லாரி டிரைவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் பேர்ணாம்பட்டு அடுத்த ஏரிக்குத்தி கிராமத்தை சேர்ந்த பழனி(37) என்பதும், பேர்ணாம்பட்டில் இருந்து பங்காரபேட்டைக்கு ரேஷன் அரிசி கடத்தி கொண்டு சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து 6 டன் ரேஷன் அரிசியுடன் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து பழனியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories: