தூத்துக்குடியில் வெவ்வேறு இடங்களில் தொழிலாளி உள்பட இருவர் கல்லால் அடித்துக் கொலை-சிறுவன் உள்ளிட்ட 2 பேர் கைது

தூத்துக்குடி : தூத்துக்குடி மீளவிட்டான் ரோடு 4வது ரயில்வே கேட் பகுதி அருகே பாழடைந்த கட்டிடத்தின்  மாடியில் வாலிபர் ஒருவரது சடலம் துர்நாற்றம் வீசிய நிலையில் கிடந்தது. தகவலறிந்த தூத்துக்குடி ரூரல் ஏஎஸ்பி சந்தீஷ், சிப்காட் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஸ்டீபன் ஜோஸ், எஸ்ஐக்கள் ஹென்சன் பவுல்ராஜ், ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இதில் அங்கு  வாலிபர் ஒருவர் கல்லால் தலை சிதைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து உடலைக் கைப்பற்றிய போலீசார் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

 மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் கொலையானவர் தூத்துக்குடி மகிழ்ச்சிபுரத்தைச் சேர்ந்த ஆத்திமுத்துவின் மகனும் கட்டிடத் தொழிலாளியுமான கார்த்திக் (25) என்பது தெரியவந்தது. மேலும் இவரை தூத்துக்குடி, அழகேசபுரத்தைச் சேர்ந்த கந்தையாவின் மகன் ராம்தேவ் (21) மற்றும் அண்ணாநகர் 4வது தெருவைச் சேர்ந்த  17 வயது சிறுவனும் கொலை செய்ததும் அம்பலமானது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

 இதில் ராம்தேவ், 17 வயது சிறுவன், கார்த்திக் ஆகிய 3 பேரும் 4ம் ரயில்வே கேட் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகேயுள்ள காலி இடத்தில்  மது அருந்தும் போது அறிமுகமாகி உள்ளனர். கடந்த 22ம் தேதி அங்குள்ள ஒரு பாழடைந்த கட்டிடத்தின் மாடியில்  மூவரும் மது அருந்தியபோது ராம்தேவ் குறித்து கார்த்திக் அவதூறாக பேசினார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் ராம்தேவ் மற்றும் 17 வயது சிறுவன் இருவரும் சேர்ந்து கார்த்திக்கை கல்லால் முகத்திலும், தலையிலும் அடித்து படுகொலை செய்துவிட்டு தப்பிச்ெசன்றது தெரியவந்தது. பின்னர் இருவரையும் தூத்துக்குடி கோர்ட் மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்திய போலீசார், அவரது உத்தரவின்பேரில் இருவரையும் சிறையில் அடைத்தனர்.

மற்றொரு சம்பவம்: இதே போல் தூத்துக்குடி பழைய துறைமுகம் அடுத்த இங்கிலீஷ் சர்ச் அருகே நேற்று முன்தினம் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் கல்லால் தலை நசுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். தகவலறிந்து விரைந்து சென்ற தூத்துக்குடி மத்திய பாகம் இன்ஸ்பெக்டர் ஐயப்பன், எஸ்ஐ முருகப்பெருமாள் மற்றும் போலீசார், உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் கொலையான முதியவர், தூத்துக்குடி ரயில் நிலையம், கடற்கரை ரோடு பகுதிகளில் கடந்த 5 ஆண்டுகளாக தர்மம் எடுத்து அங்கேயே சாப்பிட்டு தூங்கி வந்தது தெரியவந்தது.

இருப்பினும் அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்ற முழு விவரம் தெரியவில்லை. இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டதில் நடுத்தர வயது மதிக்கத்தக்க ஒருவர், இரவில் முதியவர் மீது கல்லை போட்டு கொலை செய்தது தெரிய வந்தது. இதன் அடிப்படையில் கொலையாளியை மத்திய பாகம் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Related Stories: