ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டி: 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி

ஐதராபாத்: இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றது. இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றதால் டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியிருந்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்தது. அந்த அணி தொடக்க வீரர் கேமரூன் கிரீன் 52 ரன்னில் அவுட்டானார். கேப்டன் ஆரோன் பின்ச் 7 ரன்னிலும், ஸ்டீவ் ஸ்மித் 9 ரன்னிலும், மேக்ஸ்வெல் 6 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். டிம் டேவிட் 54 ரன் அடித்தார். இதையடுத்து 187 ரன் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில் தொடக்க வீரர் கே.எல். ராகுல் ஒரு ரன்னுடன் வெளியேற, கேப்டன் ரோகித் சர்மா 17 ரன் எடுத்தார்.

பின்னர் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடிய விராட் கோலி 48 பந்துகளில் 63 ரன்னும், சூரியகுமார் யாதவ் 36 பந்துகளில் 69 ரன்னும் எடுத்தனர்.ஹர்திக் பாண்ட்யா 25 ரன் அடித்த நிலையில் களத்தில் இருந்தார். இந்திய அணி 19.5 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் அடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியுள்ளது.

Related Stories: