மாதவரம் மண்டலத்தில் தெரு பெயர் பலகைகள் இல்லாமல் முகவரியை தேடி அலையும் அவலம்

புழல்: மாதவரம் மண்டலத்தில் பல வார்டுகளில் தெரு பெயர் பலகைகள் இல்லாததாலும், போஸ்டர் ஒட்டி மறைக்கப்பட்டுவிட்டதாலும் முகவரியை தேடி அலையும் அவலம் உள்ளது. சென்னை மாநகராட்சி, மாதவரம் மண்டலம், 23, 24, 31, 32, 33வது வார்டு பகுதிகளுக்கு உட்பட்ட புழல், காவாங்கரை, கன்னடபாளையம், கதிர்வேடு, எம்ஜிஆர் நகர், கலெக்டர் நகர், புத்தகரம், சூரப்பட்டு, சண்முகபுரம், லட்சுமிபுரம், ரெட்டேரி, கடப்பா சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சென்னை மாநகராட்சி சார்பில் தெருக்களின் பெயர் பலகைகள் வைக்கப்பட்டு உள்ளது.

இந்த பலகைகளில் அரசியல் கட்சியினர், பொது அமைப்பினர் தங்களது போஸ்டர்களை ஒட்டி தெருக்களின் பெயர்களை மறைத்து உள்ளனர். இது, ஒரு பக்கம் இருந்தாலும் ஒரு சில இடங்களில் பெயர் பலகைகளின் இரும்பு தகடுகளே இல்லை. இதனால் வெளியூர்களில் இருந்து புதிதாக வரும் பொதுமக்கள் மற்றும் தபால், கூரியர் சர்வீஸ் ஊழியர்கள் சம்பந்தப்பட்டவர்களின் முகவரி தெரியாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதுதொடர்பாக, அந்தந்த பகுதி பொதுமக்கள் பலமுறை அந்தந்த வார்டு மாநகராட்சி அலுவலக அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது. எனவே, இனிவரும் காலங்களிலாவது சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுத்து தெரு பெயர்கள் ஒட்டப்பட்டு வரும் போஸ்டர்களை அவ்வப்போது அகற்றி ஒட்டுபவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், உடைந்து போன தெரு பெயர் பலகைகளை புதிதாக அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

*வழிகாட்டி பலகைகள் இல்லாததால் சிரமம்

மாதவரம் ரவுண்டானா ஜிஎன்டி சாலை முதல் புழல், செங்குன்றம், திருவள்ளூர் கூட்டு சாலை, சோழவரம் பைபாஸ், ஜனப்பன்சத்திரம் கூட்டு சாலை, தச்சூர் கூட்டு சாலை என ஜிஎன்டி சாலையில் வாகன ஓட்டிகளுக்காக வழிகாட்டி பலகை பல இடங்களில் வைக்கப்பட்டு உள்ளது. இதில் பல இடங்களில் வழிகாட்டி பலகைகள் உடைந்து இரும்பு கம்பம் மட்டுமே உள்ளது. இதனால் சென்னை மற்றும் ஆந்திராவில் இருந்து பல்வேறு பணிகளுக்கு வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் குறிப்பாக கனரக வாகனங்களில் செல்பவர்கள் வழிகாட்டி பலகைகள் இல்லாததால் பெரிதும் சிரமப்படுகின்றனர்.

வாகனங்களை சாலையின் ஓரங்களில் நிறுத்தி முகவரிகளை கேட்டு செல்லக்கூடிய அவல நிலை உள்ளது. இது, போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளதுடன் விபத்துகளும் ஏற்படும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட தேசிய நெடுஞ்சாலை துறை மற்றும் சுங்கவரி வசூல் செய்யும் தனியார் நிறுவனத்தினர் உரிய நடவடிக்கை எடுத்து வழிகாட்டி பெயர் பலகைகளை சரி செய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: