திரிபுராவில் இருந்து சென்னைக்கு ரயிலில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல்: குருவிகள் 3 பேர் கைது

பெரம்பூர்: திரிபுராவில் இருந்து சென்னைக்கு ரயிலில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, இதுதொடர்பாக குருவிகள் 3 பேரை கைது செய்துள்ளனர். வடமாநிலங்களில் இருந்து சென்னைக்கு ரயில்களில் கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துக்களை கடத்தி வரும் மர்ம நபர்கள், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் போலீசாரின் கெடுபிடி காரணமாக அதற்கு முன்பாக உள்ள பெரம்பூர் ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து ஆட்டோ மூலம் பல்வேறு கடத்தி சென்று விற்பனை செய்கின்றனர். அதன்படி, வட மாநிலத்தில் இருந்து ரயிலில் கஞ்சா கடத்தி வரும் ஒரு கும்பல், பெரம்பூர் ரயில் நிலையத்தில் இறங்கி, அதன் பின்புறம் உள்ள ஜமாலியா பகுதி வழியாக பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்கிறது, என ஓட்டேரி இன்ஸ்பெக்டர் ஜானி செல்லப்பாவுக்கு நேற்று முன்தினம் இரவு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் நேற்று அதிகாலை ஜமாலியா பகுதியில் இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் ரகசிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது காலை 6 மணியளவில் திரிபுரா ரயில் மூலம் வந்திறங்கிய 3 வடமாநில வாலிபர்கள், 2 பெரிய பார்சல்களுடன் ஆட்டோ மூலமாக ஜமாலியா பகுதிக்கு கிளம்பி சென்றனர். அந்த ஆட்டோவை ஓட்டேரி மேம்பாலம் அருகே போலீசார் மடக்கி சோதனை செய்தபோது, அதில் கஞ்சா பார்சல்கள் இருந்தன. விசாரணையில், அவர்கள் திரிபுரா மாநிலத்தை சேர்ந்த சுகன்டா தாஸ் (26), லிட்டன் நமா (30), பிரசன்ஜித் டேட்டா (28) என தெரியவந்தது.

இவர்கள் குருவிகளாக செயல்பட்டு, திரிபுராவில் இருந்து மொத்தமாக கஞ்சா கொண்டு வந்து, செல்போன் அழைப்பின் மூலம் யாரிடம் கொடுக்க சொல்கிறார்களோ, அவர்களிடம் கொடுத்து பணத்தை பெற்று சொந்த ஊர் திரும்பி செல்வது வழக்கம், என தெரியவந்தது. இதுகுறித்து ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, 3 பேரையும் கைது செய்து, இதன் பின்னணியில் உள்ள நபர்கள் குறித்து தீவிரமாக விசாரிக்கின்றனர். அவர்களிடம் இருந்து 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories: