அடுத்தவரின் மனைவிக்கு மெசேஜ் அனுப்பியவருக்கு சரமாரி வெட்டு

பெரம்பூர்: வியாசர்பாடி, பி-கல்யாணபுரம் 2வது தெருவை சேர்ந்தவர் விக்கி (19). பாரிமுனையில் ஒரு தனியார் கடையில் லோடு மேனாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த இன்பரசன் என்பவரது மனைவிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது, இன்பரசனின் மனைவி, தனது செல்போன் எண்ணை விக்கியிடம் கொடுத்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு இன்பரசன் மனைவியின் செல்போனுக்கு விக்கி மெசேஜ் அனுப்பியுள்ளார். இதை பார்த்த இன்பரசன், விக்கியை செல்போனில் தொடர்புகொண்டு, ‘‘இந்த நேரத்தில் எதற்கு எனது மனைவிக்கு மெசேஜ் அனுப்புகிறாய்’’, என்று கேட்டுள்ளார். அப்போது, அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில், ஆத்திரமடைந்த இன்பரசன், தனது கூட்டாளிகளான ரஞ்சித், அருண், இளையா ஆகியோருடன் சேர்ந்து, விக்கியின் வீட்டுக்கு சென்று மிரட்டியுள்ளார்.

அப்போது, இருதரப்பினரிடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இன்பரசன் உள்பட 4 பேரும் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து விக்கியை  சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் படுகாயமடைந்த விக்கியை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு விக்கி தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வியாசர்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான இன்பரசன், ரஞ்சித், அருண், இளையா ஆகிய 4 பேரையும் தேடி வருகின்றனர்.

Related Stories: