கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பார்க்கிங்கில் பைக் திருடியவர் சிக்கினார்

அண்ணாநகர்: கோயம்பேடு பார்க்கிங் பகுதியில் தொடர்ந்து பைக் திருட்டில் ஈடுபட்டவரை ஊழியர்கள் சுற்றி வளைத்து பிடித்தனர். தப்பி ஓடிய 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர். கோயம்பேடு பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள தனியார் பார்க்கிங்கில் வாகனங்கள் தொடர்ந்து திருட்டுப்போவதாக, அதன் மேலாளர் தயாளன் (40) கோயம்பேடு போலீசில் புகார் தெரிவித்திருந்தார். அதன்படி, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதனிடையே, புகார் கொடுத்த சில மணி நேரத்திலேயே பார்க்கிங்கில் இருந்து மற்றொரு பைக் திருட்டுப்போனது. இதையடுத்து பார்க்கிங் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது 5 பேர், பைக்கை திருடி செல்வது பதிவாகியிருந்தது. இதையடுத்து, பைக் திருட்டு கும்பலை பிடிக்க தனிப்படை போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்தனர்.

அப்போது அங்கு 5 பேர் கொண்ட மர்ம கும்பல், ஒரு  பைக் லாக்கரை உடைத்து திருட முயன்றது. இதை பார்த்த ஊழியர்கள் அங்கு ஓடி வந்தனர். உடனே, மர்ம கும்பல் அங்கிருந்து தப்ப முயன்றது. இதில், ஒருவர் சிக்கிக்கொண்டார். அந்த நபரை சரமாரியாக அடித்து உதைத்த ஊழியர்கள் கோயம்பேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில், பிடிபட்ட நபர் கடலூர் மாவட்டத்ைத சேர்ந்த சிவன் (42) என்பதும், உணவு டெலிவரி நிறுவனத்தில் டிரைவராக பணியாற்றி வருவதும்,  குடும்ப செலவுக்கு போதுமான பணம் இல்லாததால் பைக் திருட்டில் ஈடுபட்டு வந்ததும், ஒரு பைக்கை திருடி கொடுத்தால், 5,000 ரூபாய் பெற்று வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து சிவனை கைது செய்து அவரிடம் இருந்து இரண்டு பைக்குகளை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும், தப்பி ஓடிய 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். கடந்த ஒரு வாரத்துக்கு முன் சிவன், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பைக் திருடிக்கொண்டு சென்றபோது, போலீசார் பிடித்து ஆர்.சி புத்தகம், வாகன உரிமம் கேட்டனர். அப்போது என்னிடம் எந்த ஆதாரமும் இல்லை என்று கூறியுள்ளார். இதனால் அப்போது அவரிடம் இருந்து பைக்கை மட்டும் பறிமுதல் செய்துவிட்டு சிவனை விட்டுவிட்டனர். தற்போது அவர் கைது செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: