பெட்ரோல் பங்க் ஊழியர் சுருண்டு விழுந்து மரணம்

பெரம்பூர்: கொடுங்கையூர் சின்னாண்டி மடம் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் துளசி ராஜ் (19). இவர் 8ம் வகுப்பு வரை படித்துவிட்டு கடந்த 4 மாதங்களாக கொடுங்கையூர் கண்ணதாசன் நகர் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்கில் வேலை செய்து வந்தார். 24ந் தேதி இரவு 10 மணி அளவில் வாகனங்களுக்கு பெட்ரோல் போட்டுக் கொண்டிருக்கும்போது திடீரென்று ரத்த வாந்தி எடுத்து கீழே சுருண்டு விழுந்தார். உடனே அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பிறகு, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, துளசிராஜை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதனால், அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் அவர்களது பெற்றோருக்கும், கொடுங்கையூர் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர. போலீசார் ஸ்டான்லி மருத்துவமனைக்கு சென்று துளசிராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். முதல்கட்ட விசாரணையில் துளசி ராஜிக்கு வலிப்பு நோய் பிரச்னை இருந்து வந்ததாகவும், அதனால் வலிப்பு நோய் ஏற்பட்டு அவர் உயிரிழந்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கின்றனர். தொடர்ந்து போலீசார்  விசாரித்து வருகின்றனர்.

Related Stories: